2686. | இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால் ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும், வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா, |
(மேலும் அகத்தியர்) இப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால் - இவ்வுலக முழுவதையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து நிறுத்தாலும்; ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் - ஒப்பாக வருதலை உடையது எனச் சொல்வதற்கு இயலாத ஓர் அரிதான வாளையும்; வெப்பு உருவு பெற்ற அரன் - தீ வடிவு கொண்ட சிவபெருமான்; மேருவரை வில்லாய் முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும் நல்கா - மகா மேரு மலையை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்த ஒப்பில்லாத வலிய அம்பையும் கொடுத்து, ஒப்பு வரவு இற்று என - ஒப்பாக வருவது இல்லாதாகும் என - என்று பொருள் கொள்வர். நல்கா - நல்கி. சிவபெருமான் திரிபுரங்களை எரித்த போது மேருமலையை வில்லாகவும் திருமாலை அம்பாகவும் கொண்டார் எனப் புராணம் கூறும். மொய்கணை என்பதைச் சிலப்பதிகாரம் (6.40-41) எரிமுகப் பேரம்பு என்று கூறும். வான்மீகம், இந்த வில் விசுவகருமாவினால் செய்யப் பெற்றுத் திருமாலிடம் அளித்தது என்றும், அந்த அம்பு பிரமனால் அளிக்கப் பெற்றதென்றும், அவ்வம்புப் புட்டிலும் வாளும் இந்திரனால் கொடுக்கப் பெற்றவை என்றும் அகத்தியர் கூறி இராமனிடம் அளித்ததாகக் கூறும். 'மொய்க்கவச நல்கா' என்ற பாடம் கொண்டு அகத்தியர் இராமனுக்குக் கவசமும் அளித்தார் என்பர். இதற்குப் பிற நூல்களில் சான்றில்லை. 56 |