பஞ்சவடியின் சிறப்பு 2687. | 'ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி, பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி, தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் பாங்கர் உளதால், உறையுள் பஞ்சவடி-மஞ்ச! |
மஞ்ச - மைந்தனே! ஓங்கும் மரன் ஓங்கி - உயர்ந்த மரங்கள் நிமிர்ந்து வளரப் பெற்றும்; மலை ஓங்கி - மலைகள் உயர்ந்து விளங்கப் பெற்றும்; மணல் ஓங்கி - மணற்குன்றுகள் உயர்ந்து விளங்கப் பெற்றும்; பூங் குலை குலாவு குளிர் சோலை புடைவிம்மி - பூங் கொத்துகள் விளங்கும் குளிர்ந்த சோலைகள் பக்கங்களில் விளங்கப் பெற்றும்; தூங்குதிரை ஆறுதவழ் சூழலது ஓர் குன்றின் பாங்கர் - குதிக்கும் அலைகளுடைய ஆறுகள் பாயப் பெற்றுமுள்ள சூழ்ந்த இடங்களையுடைய ஒரு சிறு மலையின் பக்கத்தில்; பஞ்சவடி உறையுள் உளது - பஞ்சவடி என்னும் வாழிடம் ஒன்று உள்ளது; ஆல் - அசை. பஞ்சவடி - ஐந்து ஆலமரங்களின் கூட்டம். அதனை உடைய இடத்தைச் சுட்டியது. அகண்ட கோதாவரி ஆற்றின் கரையில் நாசிகாத்திரி யம்பகத்துக்கு அருகில் உள்ளது பஞ்சவடி. அது இராமனின் கருத்திற்கியைந்த வாழிடமாம் என்பது. ஆறு - கோதாவரி முதலிய ஆறுகள். அகத்தியர் ஆசிரமத்திலிருந்து பஞ்சவடி இரண்டு யோசனை தூரம் என வான்மீகம் கூறும். பூங்குலை உம்மைத் தொகையாகக் கொண்டு பூக்களும் பழங்களும் என்றுமாம். மஞ்ச என்பது மைந்த என்பதன் போலி. ஓங்கு என்ற சொல் முதலடியில் நான்கு முறை ஒரு பொருளில் அடுக்கி வந்ததால் சொற்பொருட் பின்வரு நிலையணி. 57 |