2688. | 'கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின் செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதா, அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட. |
(பஞ்சவடியில்) கனி ஈவ கன்னி இளவாழை - பழங்களைத் தரும் மிக இளமையான வாழை மரங்களும்; கதிர் வாலின் செந்நெல் உள - ஒளி பொருந்திய நுனியையுடைய செந்நெற்பயிர்களும் உள்ளன; தேன் ஒழுகு போதும் உள - தேன் வழிகின்ற மலர்களும் உள்ளன; தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள - தெய்வத் தன்மை பொருந்திய 'காவிரி என்று கூறத்தக்க நீர் வெள்ளம் பாயும் நதிகளும்' உள்ளன; பொன் இவளொடு அன்பின் விளையாட - பொன்னையொத்த இச்சீதையுடன் அன்போடு விளையாடுவதற்கு; போதா அன்னம் உள - பெருநாரைகளும் அன்னங்களும் உள்ளன. கன்னி இளவாழை - ஒன்றன் பின் ஒன்றாக அழியாது ஈன்று கொண்டேயிருக்கும் வாழை எனலுமாம். பஞ்சவடி நீர்வளம் மிக்க இடமாதலால் வாழை, நெல், சோலை, நீர்ப்பறவைகள் ஆகியன விளங்கி நிற்கின்றன. கதிர்வால் - ஒளி பொருந்திய வாலோடு விளங்கும் என்பர். உணவுக்கும் நீருக்கும் அவ்விடத்தில் பஞ்சமில்லை என்பது இதனால் விளங்கும். மீண்டும் சீதைக்குப் பொழுது போகப் பறவைக் கூட்டங்கள் உள்ளன என்றார். பொன்னி யாற்றைக் கூறியதால் கவியின் நாட்டுப்பற்று நன்கு புலப்படும். கன்னி இள - ஒரு பொருட் பன்மொழி. கதிர்வாலின் செந்நெல் எனப் பாடங் கொண்டு ஒளிரும் வாலை உடைய ஒருவகைக் கெண்டை மீனைக் குறிக்கும் என்பர். 58 |