இராமன் முதலியோர் சடாயுவைக் காணுதல்

கலி விருத்தம்

2690.நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
     கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின;
     சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
     கழுகின் வேந்தையே.

    (இராமன் முதலிய மூவரும்) காவதம் பலவும் நடந்தனர் - பல காத
வழியும் நடந்தவர்களாய்;கிடந்தன நல் நதி - இடையே ஓடும் சிறந்த
ஆறுகளையும்; நின்றன கேண்மையின் தொடர்ந்தன கிரிகள் -
ஆங்காங்கே நிலைபெற்றனவாயும் உறவுள்ளன போலத்
தொடர்ச்சியாகவுள்ளனவுமான மலைகளும்; துவன்றின - நெருங்கியிருந்தன;
சூழல் யாவையும் கடந்தனர் - இத்தகைய மலைகள் சூழ்ந்திருந்த
காடுகளையும் தாண்டிச் சென்றனர்; கழுகின் வேந்தை(க்) கண்டனர் -
சடாயு எனும் கழுகரசனைப் பார்த்தனர்; ஏ - அசை.

     காவதம் - காதம். கிடந்தன - படுத்திருந்தன எனக் கூறும் வகையில்
நீண்டு விளங்கின என்றும் உரைப்பர். நின்றன என்பது தனித் தனியாய்
இருந்த மலைகள். தொடர்ந்தன என்பது மலைத் தொடர்ச்சிகள். நல்நதி -
புண்ணிய ஆறுகள் என்றும் ஆம்.                                 1