| 2691. | உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து உச்சி சேர் அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் சிறை விரித்து இருந்தனன் என, விளங்குவான் தனை, |
உருக்கிய சுவணம் ஒத்து - தீயில் காய்ச்சி உருக்கப் பெற்ற பொன்னைப் போன்றுள்ள; உதயத்து உச்சிசேர் அருக்கன் -உதயகிரியின் சிகரத்தைச் சேர்ந்த இளஞ்சூரியன்; இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் - இந்த அகன்ற உலகில் பொருந்திய எல்லாத் திசைகளையும்; தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் - விளங்கச் செய்யும் அடர்ந்த தன் ஒளிக் கீற்றுக்களால்; சிறை விரித்து இருந்தனன் என - சிறகுகளை எங்கும் விரித்துக் கொண்டு இருந்தான் என்று சொல்லும்படி, விளங்குவான் தனை - விளங்கும் சடாயுவை, உதயகிரிக்கு உருக்கிய பொன் உவமை. உருக்கிய பொன் ஒத்து விளங்குவான் எனவும் உரைப்பர். சடாயுவுக்கு இளங்கதிரவனும் அவன் விரித்த சிறகுகளுக்குக் கதிர்களும் உவமை. சடாயு தன் சிறகுகளை விரித்து ஒரு மலை உச்சியில் தங்கியிருந்த காட்சியை இவ்வாறு காட்டுவார் கவிஞர். சடாயுவின் நிறம் பொன்னிறம் என்பது இக்கவியால் அறியலாம். வடமொழியில் அம்மலைக்கு உதயம் என்றே பெயர். 2 |