2692. | முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின் சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய, அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய, மந்தரகிரி என வயங்குவான்தனை, |
முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின் - முன்னொரு காலத்தில் ஒரு பெரிய கரியமலையின் உச்சியிடத்தில்; அந்தம் இல் கனைகடல் - அளவில்லாத ஒலிக்கும் திருப்பாற்கடலில்; சந்திரன் ஒளியொடு தழுவ - மதியின் ஒளியுடன் பொருந்தும்படி; அமரர் சார்த்திய நாட்டிய - தேவர்கள் சேர்த்து நிறுத்திவைத்த; மந்தரகிரி என வயங்குவான் தனை - மந்தர மலை போல விளங்கும் சடாயுவை, சடாயுவுக்கு முறையே மந்தர கிரி அவர் தோற்றத்திற்கு, சந்திரனின் நிலவொளி அவர் உடலின் தோற்ற இன்பத்திற்கும் உவமை. கழுத்திலிருந்து காணப் பெறும் வெண்மை நிறத்திற்கும் நிலவு உவமை ஆம் என்பர். சடாயு ஒரு ஆலமரத்தில் தங்கியிருந்ததாக வான்மீகம் கூறும். இங்குக் கருமலை முகட்டு முன்றில் என உளது. அமரரும் அசுரரும் அமுதமெழப் பாற்கடலைக் கடைந்த போது மந்தர கிரியை மத்தாக நட்டனர் என்பது புராணம். முன்னர் இளங்கதிரவனை ஒளிக்கு உவமை கூறி இங்கு நிலவொளியைக் கூறுவதைக் காணும்போது சடாயுவின் காட்சி நிலவொளி போல் இன்பமூட்டியது எனக் கொள்ளலாம். முன்றில் - இல்முன், இலக்கணப்போலி. 3 |