2693.மால் நிற விசும்பு எழில்
     மறைய, தன் மணிக்
கால் நிறச் சேயொளி
     கதுவ, கண் அகல்
நீல் நிற வரையினில்
     பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்தென,
     பொலிகின்றான்தனை,

    மால்நிற விசும்பு எழில் மறைய - கருநிறமுடைய வானத்தின் அழகு
மறையவும்; தன்மணிக் கால் நிறச் சேயொளி கதுவ - தன்னுடைய அழகிய
கால்களின் நிறத்தின் சிவந்த ஒளி பொருந்தவும்; கண் அகல் நீல் நிற
வரையினில் -
இடம் அகன்ற நீல நிறத்தையுடைய மலையில்; பவள நீள்
கொடி போல் நிறம் பொலிந்தென -
நீண்ட பவளக் கொடி போன்று
அழகிய நிறத்தோடு விளங்குதல் போல; பொலிகின்றான் தனை -
விளங்குகின்ற சடாயுவை,

     விசும்பின் மால்நிறம் சடாயுவின் மேனி நிறத்தால் மறைந்தது எனும்
போது அவ்வொளி மேலே வீசுவதைச் சுட்டும். காலின் செந்நிறம் கீழ்ப்புறம்
வீசிக் கரிய மலையில் பவளக் கொடி படர்ந்தது போல் விளங்கி நிற்கும்
நிலை அதன் சிறப்பைக் கூறும். சேய் என்பது செம்மை என்பதன் விகாரம்
நீல் என்பது நீலம் என்பதன் - கடைக்குறை.                      4