2695. | வீட்டி வாள் அவுணரை, விருந்து கூற்றினை ஊட்டி, வீழ் மிச்சில் தான் உண்டு, நாள்தொறும் தீட்டி, மேல் இந்திரன் சிறு கண் யானையின் தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்தனை. | வாள் அவுணரை வீட்டி - வாளேந்திய கொடிய அசுரர்களை போரில் (உயிரும் உடலும் வேறுவேறாக) விடுவித்து; கூற்றினை விருந்து ஊட்டி - யமனைத் தன் விருந்தாகக் கொண்டு அவர்களை உண்ணச் செய்து; வீழ்மிச்சில் தான் உண்டு - அந்த யமன் உண்டது போகக் கீழே வீழ்ந்த மீதியைத் தான் அருந்தி; நாள்தொறும் தீட்டி - தினமும் மர முதலியவற்றில் தீட்டப் பெற்று; சிறுகண் யானையின் மேல் இந்திரன் தோட்டிபோல் - சிறிய கண்களையுடைய ஐராவதம் என்னும் யானையின் மேல் விளங்கும் இந்திரனுடைய அங்குசம் போல்; தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை - தேய்ந்து விளங்கும் மூக்கை உடைய சடாயுவை, சடாயு அவுணர்களைக் கொன்று அவர்கள் உயிரை யமனுக்கு விருந்தாக்கி மீதியிருக்கும் உடலைத் தான் உண்பவர் என்பதாம், தீயவரை அழிப்பதும், விருத்தோம்பலும் ஆகிய மேலான நெறியில் சடாயு வாழ்பவர் எனத் தெரிகிறது. யானையைச் செலுத்துதற்குக் குத்துவதால் தேய்ந்து விளங்கும் அங்குசம் போல் பகைவர் உடலை உண்டு உண்டு சடாயுவின் மூக்கும் தேய்ந்து விளங்குகிறது. கழுகின் அலகு கூர்மையும் வலிவும் தூய்மையும் உடையது என்பதை இது காட்டும். துண்டம் - பறவையின் அலகு. உருவில் பெரிய யானையின் கண் சிறியது. அது போல் கழுகின் கண்ணும் அளவில் சிறுத்துத் தொலைவில் உள்ளவற்றை நோக்கும் திறமையது. கூற்றினை ஊட்டி - கூற்றுக்கு ஊட்டி என்ற பொருளில் உருபு மயக்கமுமாம். இந்திரன் யானையின் தோட்டி - புகழ்ப் பொருள் உவமை. 6 |