2697. சொல் பங்கம் உற நிமிர்
     இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும்
     அருணன் செம்மலை,
சிற்பம் கொள் பகல் எனக்
     கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப் பல
     கண்டுளான்தனை,

    சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை - சொற்கள்
கூறமுடியாமல் தோல்வியுறும்படி வளர்கின்ற புகழின் பெரும் தொகுதி
போன்றவனை; அல்பங்கம் உற வரும் அருணன் செம்மலை - இருள்
அழிவடையும்படி தோன்றும் அருணனின் மகனை; கற்பங்கள் எனைப் பல-
பல கல்ப காலங்களை; கடிது சென்று தீர் சிற்பங்கொள் பகல் என -
விரைவில் கழியும் சிறுமையுற்ற நாட்களைப் போல; கண்டுளான் தனை -
கண்டுள்ள சடாயுவை

     இதனால் சடாயு மிக்கபுகழும், நீண்ட வாழ்நாளும் கொண்டவர் என்க.
இவன் புகழைச் சொல்லச் சொல்ல தீராது என்பதைச் 'சொல் பங்கம் உற
நிமிர் இசை' என்ற தொடர் சுட்டும். அருணன் கதிரவனின் தேரோட்டி,
அருணன் உதயமானால் இருள் இரிந்தோடுவதால் 'அல்பங்கம் உற வரும்
அருணன்' எனப்பட்டான். சிற்பம் - சிறுமை, அற்பம்                8