2698. | ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று, அது தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற வீங்கிய வலியினில் இருந்த வீரனை- ஆங்கு அவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். | ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று - மிக உயர்ந்த பெரிய மலை ஒன்றில் தங்கியிருந்து; அது தாங்கலது இருநிலம் தாழ்ந்து தாழ்வுற- அம்மலை தன்னைத் தாங்க முடியாமல் பெரிய பூமியில் புதைந்து ஆழ்ந்து போக; வீங்கிய வலியினில் இருந்த வீரனை - மிக்க பலத்தோடு இருந்த வீரனாம் அச்சடாயுவை; அவர் ஆங்கு அயிர்க்கும் சிந்தையார் அணுகினர் - இராமலக்குவர் அவ்விடத்தில் ஐயமுற்ற மனமுடையவராய் அருகே சென்றனர். அவர் தங்கியிருந்த மலை அவர் உடற் பொறையைத் தாங்காமல் பூமியில் ஆழ்ந்த தால் அவர் வலிமை புலப்படும். சடாயு தங்கியிருந்த மலை பிரசரவணம் எனப்படும். இராமலக்குவர் ஐயுறக்காரணம் அவருடைய பேருருவைக் கண்டு அரக்கனோ என எண்ணியதாம். 9 |