இராம-இலக்குவரும், சடாயுவும் ஒருவரை ஒருவர் ஐயுறல் 2699. | 'இறுதியைத் தன்வயின் இயற்ற எய்தினான் அறிவு இலி அரக்கன் ஆம்; அல்லனாம் எனின், எறுழ் வலிக் கலுழனே? என்ன உன்னி, அச் செறி கழல் வீரரும், செயிர்த்து நோக்கினார். |
அச் செறி கழல் வீரரும் - அந்த நெருங்கிய வீரக்கழல் அணிந்த வீரர்களாம் இராமலக்குவர்களும்; (இவன்) தன்வயின் இறுதியை இயற்ற எய்தினான் - தனக்குச் சாவை உண்டாக்கிக் கொள்ள இங்கு வந்தவனாம் இவன்; அறிவு இலி அரக்கன் ஆம் - அறிவற்ற யாரோ ஓர் அரக்கன் ஆவான்; அல்லன் ஆம் எனின் - அவ்வாறு அரக்கன் அல்லாதவன் ஆனால்; எறுழ் வலிக் கலுழனே - மிக்க வலிமையுடைய கருடனே ஆவான்; என்ன உன்னி - என்று எண்ணி; செயிர்த்து நோக்கினார் - சந்தேகப்பட்டுப் பார்த்தனர். தன்வயின் இறுதி இயற்ற என்பதற்குத் தன்மூலமாக இராமலக்குவர்க்கு அழிவைச் செய்ய என்று கூறலுமாம். நல்லறிவின்றித் தீயவழிப் புகுந்து தனக்குத் தானே அழிவைத் தேடியதால் 'அறிவிலி அரக்கன்' எனப்பட்டான். எறுழ் வலி - ஒருபொருட்பன்மொழி. இது வடிவு பற்றி வந்த ஐயநிலை உவமையணி. 10 |