2702.'காமன் என்பவனையும்,
     கண்ணின் நோக்கினேன்;
தாமரைச் செங் கண் இத்
     தடக் கை வீரர்கள்
பூ மரு பொலங் கழற்
     பொடியினோடும், ஒப்பு
ஆம் என அறிகிலென்;
     ஆர்கொலாம் இவர்?

    காமன் என்பவனையும் - மன்மதன் என்று அழகிற் சிறப்பித்துச்
சொல்லப்படுகின்றவனையும்; கண்ணின் நோக்கினேன் - கண்ணால்
கண்டுள்ளேன்; தாமரைச் செங்கண் இத்தடக்கை வீரர்கள் - தாமரை
இதழ் போன்ற சிவந்த கண்களையும் நீண்ட கைகளையுமுடைய இந்த
வீரர்களின்; பூமரு பொலங் கழற் பொடியினோடும் - தாமரை மலர்
போன்ற பொற் பாதங்களில் ஒட்டிய தூளியோடும்; ஒப்பு ஆம் என
அறிகிலென் -
ஒப்பாவான் என்று அறிகின்றேனில்லை; இவர் ஆர்
கொலாம் -
இவ்வீரர்கள் யாவரோ?

     'ஒப்பாம் என அறிகிலேன்' என்றதால் 'ஒப்பாக மாட்டான் என
அறிவேன்' என்பது தெளிவு. இவை இரு பாட்டாலும் சடாயு
இராமலக்குவரைப் புலவரல்லர் எனத் தெளிந்தமை கூறப்பட்டது. இவர்கள்
இருவராக இருந்ததாலும் புரந்தரன் முதலியோர் கொண்டுள்ள வச்சிரப்படை
முதலியவை காணப் பெறாமையாலும் இம்முடிவுக்குச் சடாயு வந்தார். பழைய
இராமாயணத் தனிச் செய்யுளில் சாம்பவன் கூற்றில் 'அலைகடல் கடையக்
கண்டேன்' எனத் தொடங்கிச் 'சிலை மதன் வடிவுகண்டேன்' என்ற தொடர்
காணப்படுகிறது. இதனால் சடாயுவும் மன்மதன் சிவபெருமானால்
எரிக்கப்படாமைக்கு முன் கண்ட செய்தி வெளிப்படுகிறது.            13