2704.'கரு மலை செம் மலை
     அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங்
     கண் வீரர்தாம்,
அருமை செய் குணத்தின் என்
     துணைவன் ஆழியான்
ஒருவனை, இருவரும்
     ஒத்துளார்அரோ.'

    கருமலை செம்மலை அனைய காட்சியர் - நீல மலையையும்
பொன் மலையையும் போன்ற தோற்ற முடையவர்களும்; திருமகிழ்
மார்பினர் -
வெற்றித் திருமகள் மகிழ்ந்து வீற்றிருக்கும் மார்பை
உடையவர்களுமான; செங்கண் வீரர் இருவரும் - சிவந்த கண்களை
உடைய இருவீரர்கள்; அருமைசெய் குணத்தின் என் துணைவன்
ஆழியான் ஒருவனை ஒத்துளார் -
பெறற்கரிய நற்பண்புகளை உடைய
என் நண்பனாம் தயரத சக்கரவர்த்தியைப் போன்று இருக்கின்றனர்; தாம்
அசை, அரோ -
ஈற்றசை.

     கருமலை - இந்திர நீல மலை. செம்மலை - செம்பொன்னிறமுள்ள
மேருமலை. இராமனுக்குக் கரு மலையும், இலக்குவனுக்குச் செம்மலையும்
உவமை. அரக்கர்களை அழிக்கச் சினத்தால் சிவந்த கண்கள் எனவும்,
தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள் எனவும் கூறலாம். திருமாலைச்
'செங்கண் மால்' என்பதால் இராமலக்குவர் திருமாலின் அம்சம் என்பது
குறிப்பால் பெறலாம். தந்தையின் சாயல் மக்களிடம் இருப்பது இயல்பு.
இதனால் 'ஆழியான் ஒருவனை இருவரும் ஒத்துளார்' எனச் சடாயு
கருதினார். தாம் - துணிவுப் பொருளுணர்த்தும் இடைச் சொல்லுமாம்.
அரோ வியப்புப் பொருள் தரும் இடைச்சொல் எனலுமாம்.           15