'நீவிர் யார்?' எனச் சடாயு வினவுதல் 2705. | எனப் பல நினைப்புஇனம் மனத்துள் எண்ணுவான், சினப்படை வீரர்மேல் செல்லும் அன்பினான், 'கனப் படை வரி சிலைக் காளை நீவிர் யார்? மனப்பட, எனக்கு உரைவழங் குவீர்' என்றான். |
எனப்பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் - என்று பல எண்ணங்களின் தொகுதியை உள்ளத்தில் நினைப்பவரும்; சினப்படை வீரர்மேல் செல்லும் அன்பினான் - கொடிய ஆயுதங்களை உடைய அவ்வீரரிடத்துச் செல்வதற்கான அன்பினை உடையவருமான சடாயு; கனப்படை வரிசிலைக் காளை நீவிர் யார் - வலிய ஆயுதமாகிய கட்டமைந்த விற்படை கொண்ட காளை போன்றவர்களே நீங்கள் யாவர்?; மனப்பட எனக்கு உரை வழங்குவீர் என்றான் - என் உள்ளத்தில் பதியும்படி மறுமொழி கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். பலவேறு பட்ட ஐயவுணர்கள் கொண்ட சடாயு தம் நண்பன் தயரதனின் சாயலை இராமலக்குவரிடம் கண்டதால் அவ்விருவர் மீதும் மிக்க பரிவு கொண்டதால் 'நீவீர் யார்?' எனக் கேட்டதுடன் 'என மனத்தில் பதியும்படி கூறுங்கள்' என வேண்டிக் கொண்டார். நினைப்பு இனம் - பல எண்ணங்களின் கூட்டம் இவற்றின் விளக்கத்தை முந்திய பாடல்களில் கண்டோம் (2700 - 2704). 16 |