'தயரதன் மைந்தர்' எனக் கேட்டு, சடாயு மகிழ்தல் 2706. | வினவிய காலையில், மெய்ம்மை அல்லது புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால், 'கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான், வனை கழல் தயரதன், மைந்தர் யாம்' என்றார். | வினவிய காலையில் - கேட்ட பொழுது; மெய்ம்மை அல்லது புகல்கிலாமையால் புனை மலர்த் தாரவர் - உண்மை அல்லாமல் வேறொன்றைப் பேசுவதில்லை ஆதலால் அழகிய பூமாலை அணிந்த இராமலக்குவர்; கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான் - ஒலிக்கும் கடலாற் சூழ்ந்த பெரிய உலகம் யாவையும் காக்கும் ஆணைச் சக்கரமுடையவனும்; வனை கழல் தயரதன் மைந்தர்யாம் என்றார் - தரித்த வீரக்கழலுடையவனுமாகிய தயரதனுடைய மக்கள் நாங்கள்' எனக் கூறினர். முன்னம் அறியாதவரிடம் உண்மையைக் கூறக் கூடாது என்பது அரசியல் நீதி. எனினும் இராமலக்குவர் எத்தகையோரிடமும் அஞ்சாது உண்மை கூறும் தனிப் பண்புடையவர்களாவர். புனை - அழகு தயரதன் - தசரதன் என்பதன் திரிபு. பத்துத் திக்குகளிலும் தன் தேரைச் செலுத்தி வெற்றி கண்டவன்; அரக்கர் தேர் பத்தை வென்றவன்; கருடனைத் தன் தேர்க் கொடியாகக் கொண்டவன் எனவும் பல காரணம் கூறுவர். புகல்கிலாமை என்பதிலுள்ள கில் என்பது உறுதிப் பொருளை உணர்த்தும் இடைநிலை. 17 |