2707. | உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன், தரைத்தலை இழிந்து அவர்த் தழுவு காதலன், 'விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன்தன், வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான். |
உரைத்தலும் - என்று அவர்கள் சொன்னதும்; பொங்கிய உவகை வேலையன் - கிளர்ந்த மகிழ்ச்சியாம் கடல் போன்றவரான அச் சடாயு; தரைத் தலை இழிந்து அவர்த் தழுவு காதலன் - அம்மலை உச்சியிலிருந்து பூமியில் இறங்கி வந்து அவர்களைத் தழுவிக் கொள்ளும் அன்புடைவனாய்; விரைத் தடந்தாரினான் - மணம் பொருந்திய பெரியமாலை அணிந்தவனான; வேந்தர் வேந்தன் தன் - அரசர்க்கரசனான தயரதனின்; வரைத் தடந்தோள் இணை வலியவோ என்றான் - மலை போல அகன்று விளங்கும் தோளிரண்டும் வலியனவாக உள்ளனவா எனக் கேட்டார். தயரதன் மைந்தர் எனக் கேட்டதும் சடாயு தன் நண்பனின் இனிய வாழ்வு பற்றி வினவினார் என்க. அரசர் எனும் முறையால் 'தோள் இணை வலியவோ' என்று கேட்டார். பகைவர்களை அழித்து, உலகைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏந்தியவை அரசர்களின் தோள்களாம். 'வரை தடந்தாரினிர்' எனக் கொண்டு இராமலக்குவரை விளித்தாகக் கொள்வதுமுண்டு. 18 |