2709.தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம்
கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்,
அழிவுறு நெஞ்சினன், அரற்றினான்அரோ.

    இருவரும் - இராமலக்குவராம் இருவரும்; தடக்கையால் தழுவினர்
எடுத்தனர் -
பெரிய கைகளால் தழுவி எடுத்தவர்களாய்; கண்ணின்
நீரினால் முகம் கழுவினர் -
கண்ணீரால் சடாயுவின் முகத்தைக்
கழுவினார்கள்; வழுவிய இன்உயிர் வந்த மன்னனும் - நீங்கியது எனக்
கருதப் பெற்ற இனிய உயிர் திரும்பவும் வரப் பெற்ற கழுகரசனும்; அழிவுறு
நெஞ்சினன் அரற்றினான் -
மனம் அழிந்தவனாய்ப் பின்வருமாறு
வாய்விட்டுப் புலம்பினான்; அரோ - ஈற்றசை.

     தயரதனின் மரணத்தைக் கேட்ட சடாயு உணர்வு நீங்கினார். அவரைத்
தழுவி எடுத்துத் தம் கண்ணீரால் நீராட்டினர் இராமலக்குவர். அவர்
அவ்வாறு ஆவன செய்ததால் சடாயுவுக்கு மூர்ச்சை தெளிந்து உணர்வு
வந்தது. தம் நண்பன் இறந்த துன்பம் பெருக அவர் புலம்பலானார். தடக்கை
- முழந்தாள் அளவு நீண்டகை, கண்ணீராற் கழுவுதல், பரதன் வசிட்ட
முனிவனோடு தயரதனின் உருவைக் கண்டழுத நிலையில் 'கண்ண நீரினால்
கழுவி ஆட்டினான்' என்ற நிலையோடு ஒப்பிடற் குரியது (2225).        20