அறுசீர் ஆசிரிய விருத்தம் 2710. | 'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும், பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழ- புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!- இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? |
புரவலர் தம் புரவலனே - மன்னர்க்கெல்லாம் மன்னனே!, பொய்ப் பகையே - பொய்க்குப் பகைவனே!; மெய்க்கு அணியே - உண்மைக்கு அணிகலம் ஆனவனே!; புகழின் வாழ்வே - புகழுக்கு வாழ்விடமாய் இருப்பவனே!; நின்தன்பரவல் அரும் கொடைக்கும் - உன்னுடைய புகழ்வதற்குரிய ஈகைக்கும்; பனிக்குடைக்கும் - குளிர்ந்த வெண் கொற்றக் குடைக்கும்; பொறைக்கும் - பொறுமைக்கும்; நெடும் பண்பு தோற்ற - பெரிதும் குணம் மாறுபட்டுத் தோற்றுவிட்ட; கரவல் அரும் கற்பகமும் - இரப்போர்க்கு ஈவதில் ஒளிக்காத கற்பக மரமும்; உடுபதியும் - விண்மீன்களின் தலைவனான சந்திரனும்; கடல் இடமும் - கடலால் சூழ்ந்துள்ள உலகமும்; களித்து வாழ - மகிழ்ந்து வாழும்படியாக; இரவலரும் நல் அறமும் யானும் - உன்னிடம் வந்து இரப்போரும் சிறந்த தருமமும் நானும்; இனி என்பட நீத்து ஏகினாயே - இனிமேல் என்ன துன்பப்பட எங்களை விட்டுப் போனாய்? ஏ - ஈற்றசை. தயரதன் இறந்ததால் இனித் தன்னைவிடப் பிறர்க்கு ஈவோர் யாரும் இல்லை எனக் கற்பக மரம் மகிழ்ந்தது. அவர் ஆட்சிக்குடை உலகில் நிலைத்து வளர்ந்து நிழல்தந்து பகையை நீக்கியதால் இனி அதன் தன்மை அழிந்தது எனச் சந்திரன் மகிழ்ந்தான். அவன் பொறுமையில் சிறந்தவர் என்ற நிலை மாறி அப்புகழ் தன்னிடம் வரும் என நிலம் மகிழ்ந்தது. இனிச் சம்பரனை வென்று விண்ணரசை இந்திரனுக்குத் தயரதன் வாழ்வளித்ததால் (322) கற்பகம் மகிழ்ந்தது எனலாம். சந்திரனையும் தயரதன் குடையையும் ஒப்பிட்டு 'மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி, தன் நிழல் பரப்பவும் இருளைத் தள்ளவும் அண்ணல் தன் குடை மதி அமையவும்' (176) என்ற பாடல் வரிகள் ஒப்பிடத்தக்கவை. 'வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனத்' தயரதன் தன்னைக் காத்து நின்ற (179) நிலை மாறியது என நிலம் மகிழ்ந்தது எனவும் கூறலாம். இழிந்த கழுகு எனக் கருதாமல் தன்னை நட்பாகக் கொண்டவன் இறந்ததால் இனித் தங்க வேறு இடமில்லை எனச் சடாயு வருந்தினார். கொடைக்குக் கற்பகம், குடைக்கு உடுபதி, பொறைக்குக் கடலிடம் என நிரல் நிரையாக அமைந்துள்ளதால் இது நிரல்நிறை அணி. பரவு அலரும் கரவு அலரும் எனக் கொண்டு புகழ் விரிந்த, கரத்தால் உண்டாகிய எனவும் பொருள் கொள்வர். 21 |