2711. | 'அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த நிலம் காவல்அது கிடக்க, நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் நலம் காண நடந்தனையோ? நாயகனே! தீவினையேன், நண்பினின்றும், விலங்கு ஆனேன் ஆதலினால், விலங்கினேன்; இன்னும் உயிர் விட்டிலேனால். | நாயகனே - தலைவனே!, உலகுக்கு அலங்காரம் என அமுது அளிக்கும் தனிக் குடையாய் - உலக உயிர்களுக்கு அழகைத் தருமென்று சொல்லத் தேவாமிர்தம் போன்ற அருள் அளிக்கும் ஒப்பற்ற வெண் கொற்றக் குடை உடையவனே!; ஆழி சூழ்ந்த நிலங்காவல் அது கிடக்க - கடல் சூழ்ந்த பூவுலகின் காவல் தொழில் தடைப்பட்டு நிற்கவும்; நிலையாத நிலை உடையேன் - நிலையற்ற நிலையுடைய எனது; நேய நெஞ்சின் நலம்காண நடந்தனையோ - அன்புள்ள உள்ளத்தின் நன்மையைக் கண்டறிய இவ்வுலகை விட்டுப் போனாயோ?; தீவினையேன் நண்பினின்றும் விலங்கு ஆனேன் - பாவம் புரிந்த நான் நட்பிலிருந்து நீங்கிய விலங்குச் சாதியில் பிறந்தவன், ஆதலினால் விலங்கினேன் - ஆதலால் நட்பில் தவறியவனாய்; இன்னும் உயிர் விட்டிலேன் - இன்னமும் உயிர் விடாது வாழ்கிறேன்; ஆல் - ஈற்றசை. அரசனின் வெண் கொற்றக் குடை வெளிப்படையாக அழகுடன் தோன்றினாலும் உண்மையில் உலகளிக்கும் அருள் கொண்டதாம். தனிக்குடையாய் ஒப்பற்ற குடையை உடைய பேரரசன். அரசனின் குடை 'வெயின் மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடி மறைப்பதுவே' என்ற புறப்பாடல் வரிகள் ஒப்பிடற்குரியன (புறம்35.20-21). விலங்காய் இருப்பதால் தான் இன்னும் உயிர்விடவில்லை எனச் சடாயு தம் பிறப்பின் இழிநிலையைக் குறிக்கிறார். இல்லாதிருப்பின் உடன் உயிர் விட்டிருப்பது குறிப்பு. இதனால் தலையாய நட்பினர் நண்பர் மறைவைக் கேட்டவுடனே உயிர் துறக்கும் நிலை வெளிப்படுகிறது. நிலையாத நிலை என்பது உறுதியற்ற மனநிலையையும் எப்போதும் திரிகின்ற உடல் நிலையையும் காட்டும். விலங்கு என்பது இங்குப் பறவை நிலையையும் உள்ளடக்கியுளது. ஏகினாய் - என்பது இறந்தமையைக் காட்டும் மங்கல வழக்கு. 22 |