சடாயு தன் வரலாறு கூறி, இறக்கத் துணிதல் 2714. | 'அருணன்தன் புதல்வன்யான்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன்; ஆழி இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன்; இமையோரோடும் வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;- தருணம்கொள் பேர் ஒளியீர்!- சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான். | தருணம் கொள் பேர் ஒளியீர் - இளமை பூண்ட பெரும் ஒளியுடையவர்களே!; யான் அருணன் தன் புதல்வன் - நான் அருணனது மகன்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் - அவன் செல்லும் உலகங்களெல்லாம் செல்லும் ஆற்றல் உடையேன்; ஆழி இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன் - ஆணைச் சக்கரத்தைக் கொண்டு பகை இருளின் வலிமை கெடும்படி செலுத்திய தயரதனுக்கு இனிய உயிர் நண்பன்; இமையோரோடும் - தேவர்களோடு; வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் - மற்ற சாதிகளை வகைப்படுத்திய பொழுதில் நான் வந்து பிறந்தேன்; கழுகின் மன்னன் - கழுகுகளுக்கெல்லாம் அரசன்; சம்பாதி பின் பிறந்த சடாயு என்றான் - சம்பாதி என்னுமவனுக்குத் தம்பியாம் சடாயு என்ற பெயருடையேன் என்றார். தருணம் - இளமை. அயோத்தியா காண்டத்தில் தைலமாட்டு படலத்தில் 'தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என, சிலர் குழைந்தார்' (1853) என்ற தொடரில் தருணம் இப் பொருளில் வந்துள்ளது. ஒளியைத் தயரதனுக்கும் இருளைப் பகைவர்க்கும் கொள்ளலாம். தயரதனை ஒளி என்று கூறாவிடினும் குறிப்பால் கொள்ள இடமுளது. அருணன் - சூரியனின் சாரதி, காசிபனுக்கும் விநதைக்கும் பிறந்தவன். இவன் அரம்பையுடன் கூடிடச் சம்பாதி, சடாயு பிறந்தனர். சம்பாதி - நன்றாகப் பறப்பவன். கழுகின் வேந்தனாம் சம்பாதி எனக் கூறுவோரும் உளர். 25 |