இராம-இலக்குவர் தடுத்து உரைத்தலும் சடாயு இணங்குதலும் கலி விருத்தம் 2717. | உய்விடத்து உதவற்கு உரியானும், தன் மெய் விடக் கருதாது, விண் ஏறினான்; இவ் இடத்தினில், எம் பெருமாஅன்! எமைக் கைவிடின், பினை யார் களைகண் உளார்? | உய்விடத்து உதவற்கு உரியானும் - தீங்கிலிருந்து தப்ப வேண்டிய போது காப்பாற்றி உதவி அளித்தற்கு ஏற்றவனும்; தன் மெய்விடக் கருதாது விண் ஏறினான் - தன் வாய்மையைக் கைவிட எண்ணாமல் துறக்கம் புகுந்தான்; இவ்விடத்தினில் எம்பெருமாஅன் எமைக் கைவிடின் - இக்காட்டில் எங்கள் தலைவனே எங்களை விட்டு இறந்தால்; பினையார்களை கண் உளார் - பின்பு எங்களுக்கு எவர் பற்றுக் கோடாக உள்ளார்? (ஒருவரும் இல்லை). உய்விடத்து உதவற்குரியான் - தயரதன் மெய்விடக் கருதாது - தயரதன் தான் முன் கைகேயிக்கு அளித்த இருவரங்களைக் கொடுக்காவிடில் வாய்மை சிதையும். எனவே அதைக் கருதி வரங்களைக் கொடுத்து மெய்காத்தான். களைகண் - கொடிகள் வளர்ந்து படர ஊன்றப் பெறும் கொம்பு. 'ஆருளர் களை கணம்மா அரங்கமா நகருளானே' (திருமாலை.29) என்ற தொடர் இதனுடன் ஒப்பிடற் குரியது. இக்கொடிய வனத்தில், நீங்கள் களைகணாய் உதவாவிடில் வேறு ஆதரவு எங்களுக்கு இல்லை' என இராமலக்குவர் சடாயுவிடம் அவர் உளங் கொளக் கூறினர். கைவிடுதல் - துன்ப வேளையில் உதவாமல் விட்டு நீங்குதல். பெருமாஅன் - விளியின் பொருட்டு வந்த அளபெடை. 28 |