சடாயு, 'நீவிர் வனம் புகுந்தமை என்?' என வினவல் 2720. | 'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர் ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண் போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க் காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான். | (பின் அச்சடாயு) வேந்தன் விண் அடைந்தான் எனின் - தயரதச்சக்கரவர்த்தி துறக்கம் சென்றான் என்றால்; வீரர் நீர் ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் போந்தது என்னை - வீரர்களாகிய நீங்கள் ஆள்வதற்குரிய நாட்டை மனம் விரும்பிக் காப்பாற்றாமல் இங்கு வந்தது எக்காரணத்தால்?; புகுந்த என் - வந்து சேர்ந்த தீமைகள் எவை?; புந்திபோய்க் காந்துகின்றது - என் அறிவு ஒரு நிலையில் நிற்காமல் எரிகின்றது; கட்டுரையீர் என்றான் - எடுத்து முறையாகக் கூறுங்கள் என்றார். வீரர் நீர் என்றதால் பெரு வீரர்களாய்க் காணப்படும் இராமலக்குவரைப் பகைவர் விரட்டியிருக்க இயலாது என எண்ணிய எண்ணம் குறிப்பாக உணரப்பெறுகிறது. 'ஏந்து ஞாலம்' என்பது வழி வழி உரிமையுடன் ஆண்டு வரும் நில உலகம். புந்தி - புத்தி, இங்கு மனம் எனவும் கொள்ளலாம். கட்டுரை என்பது மனத்திலுள்ள பொருளை வகைப்படுத்தி முறையாகத் தொகுத்துரைத்தல். 31 |