2721.'தேவர், தானவர், திண் திறல்
     நாகர், வேறு
ஏவர் ஆக, இடர்
     இழைத்தார்எனின்,-
பூ அராவு பொலங்
     கதிர் வேலினீர்!-
சாவர் ஆக்கி, தருவென்
     அரசு' என்றான்.

    பூ அராவு பொலங்கதிர் வேலினீர் - கூராகத் தீட்டப் பெற்றுப்
பொன் ஒளி வீசும் வேல்படையைக் கொண்டவர்களே!; தேவர் தானவர்
திண் திறல் நாகர் வேறு ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் -
தேவர்களாயினும் அசுரர்களாயினும் நாகலோகத்தவராயினும் வேறு
ஏவராயினும் உங்களுக்குத் துன்பம் செய்தார் என்றால்; சாவர் ஆக்கி
அரசு தருவென் என்றான் -
அவர்களை மாண்டவராக்கி உங்கள் அரசை
மீட்டுக் கொடுப்பேன் என உறுதி கூறினார் (சடாயு).

     பூ - கூர்மை. பூத்தொழில் அமையுமாறு பல சிற்பத் தொழில் பட
அராவுதல் என்றும் கொள்வர். பூ அராவு வேற் புரந்தரன் (3017) என்பார்
பின்னரும், ஏவர் என்றதால் பிற மனிதர், கந்தருவர் போன்றவரைக்
குறிக்கிறது.

     திண்திறல் - ஒருபொருட் பன்மொழி.                      32