இராமன் குறிப்பினால் இலக்குவன் விடையிறுத்தல்

2722.தாதை கூறலும்,
     தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும்,
     தன் சிற்றவை-
மாதரால் வந்த செய்கை,
     வரம்பு இலா
ஓத வேலை, ஒழிவு
     இன்று உணர்த்தினான்.

    தாதை கூறலும் - தந்தை போன்ற சடாயு அவ்வாறு சொன்னதும்;
சீதை கேள்வன் தம்பியை நோக்கினான்- சீதையின் கணவனாம் இராமன்
தன் தம்பியாம் இலக்குவனைக் குறிப்பால் பார்த்தான்; அவனும் தன்
சிற்றவை மாதரால் வந்த செய்கை -
(இராமனின் குறிப்பறிந்து)
இலக்குவனும் தன் சிற்றன்னையாம் கைகேயி எனும் பெண்ணால் உருவாகிய
செயல்களாம்; வரம்பு இலா ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான்-
எல்லையற்ற ஒலியுடைய பெருங்கடல் போன்ற துன்ப நிகழ்ச்சிகளைச்
சிறிதும் விட்டுவிடாமல் சடாயுவுக்கு விளக்கமாகக் கூறினான்.

     சடாயுவைத் தாதை என்றது தங்கள் தந்தையாம் தயரதனின் நண்பன்
என்ற முறைமையால். சடாயுவும் இராமலக்குவரை இம்முறை பற்றியே
'மைந்தன்மீர்' (2713) என்றும் 'மக்காள்' (2716) என்றும் கூறினார்.
சடாயுவைத் தாதை என இக்காண்டத்தில் பல இடங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது (2715, 3492). இராமன் இலக்குவனைச் சடாயுவிடம்
செய்திகளைக் கூறுமாறு குறிப்பால் நோக்கியது சிற்றன்னை கைகேயி மீது
தான் குற்றம் கூறுவதை விரும்பாமை ஆகும். இராமனின் குறிப்பை
இலக்குவன் அறியும் ஆற்றலுடையவன் என்பதை 'நோக்கினான்' என்பதால்
உணரலாம். சிறு+அவ்வை=சிற்றவை. அவ்வை - தாய் ஒலியை உடைய கடல்
போல ஒழிவின்று உணர்த்தினான் இலக்குவன் எனவும் உரைப்பர். கடல்
கரையை உடைவது. ஆனால் கைகேயினால் உண்டான துன்பம் கரை கடந்த
எல்லையற்ற துன்பம் என்பதை வரம்பிலா ஓத வேலை என்பதில் காணும்
'வரம்பிலா' என்ற சொல்லால் சுட்டப்பெறும்.                       33