சடாயு இராமனைப் போற்றுதல் | 2723. | 'உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக் கொண்டு, தாரணி, வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே! எந்தை வல்லது யாவர் வல்லார்?' எனா, | (அது கேட்ட சடாயு இராமனைப் பார்த்து) உந்தை உண்மையன் ஆக்கி - உன் தந்தையாம் தயரதனை வாய்மையாளன் என்று நிலை நாட்டி; உன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக் கொண்டு - உன் சிறிய தாயாம் கைகேயி கட்டளையைச் சிரமேல் கொண்டு, தாரணி வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே - உனக்கு உன் தந்தை அளித்த அரசுச் செல்வத்தை உன்பின் பிறந்த தம்பியாம் பரதனுக்குக் கொடுத்த கொடையீற் சிறந்தவனே!; எந்தை வல்லது யாவர் வல்லார் எனா - என் தந்தை போன்ற நீ செய்ததைப் போல யார் உலகில் செய்யத் திறமை உள்ளவர் ஆவார்? (ஒருவருமில்லை) எனக்கூறி, தந்தை தயரதனை வாய்மையாளன் என நிலைநாட்டித் தனக்குக் கிடைத்த அரசைத் தன் தம்பிக்கு ஈந்த வள்ளன்மை கருதி 'வள்ளலே!' என விளிக்கின்றார் சடாயு. மேலும் உன் போலும் தன்னலமின்றிச் செயல் புரிபவர் யார் என வியக்கின்றார். 'எந்தை' என்பதை அண்மை விளியாகக் கொண்டும் பொருள் கொள்வர். தாரணி - தரணி என்பதன் நீட்டல் விகாரம். எந்தை என்பது என் தந்தை என்பதன் மரூஉச் சொல். சடாயுவை வைணவ மரபில் பெரியவுடையார் என ஏற்றிக் கூறுவதற்கேற்ப அவர் தம் உள்ளம் இதில் வெளிப்படுகிறது. 34 |