2724. | அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன், 'வல்லை மைந்த! அம் மன்னையும் என்னையும் எல்லை இல் புகழ் எய்துவித்தாய்' என்றான். | (மேலும் சடாயு) அல்லித் தாமரைக் கண்ணணை - அகவிதழ் களையுடைய தாமரை மலர் போன்ற கண்களையுடைய இராமனை; அன்பு உறப்புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன் - அன்பு மிக அணைத்து உச்சி மோந்து சொரிந்த கண்ணீரை உடையவனாய்; மைந்த அம்மன்னனையும் என்னையும் எல்லை இல் புகழ் எய்து வித்தாய் - மகனே! தயரதச் சக்கரவர்த்தியையும் என்னையும் அளவில்லாத பெரிய புகழ் அடையச் செய்தாய்; வல்லை என்றான் - நீயே வல்லவன் என்று கூறினார். அல்லி - அகவிதழ். புல்லிமோந்து அன்பைத் தெரிவித்தல். பெற்றோர் குழந்தையிடம் புரியும் முறை. இதனைச் சடாயு இராமனைத் தன் குழந்தையாகவே கருதியதால் செய்தார். மோத்தல் - மூக்கால் முகர்தல். 'மோப்பக் குழையும் அனிச்சம்' (குறள். 90) என்றார் வள்ளுவரும். சடாயு உயிர் நீங்கும் போது இராமலக்குவரை அருகில் அழைத்துத் 'தாக்கி அரக்கன் மகுடத் தலை தகர்த்த மூக்கினால் உச்சி முறை முறையே மோக்கின்றான்' (3504) என வருதல் காண்க. 'மன்னையும் என்னையும்' என்றதால் தயரதனையும் தம்மையும் ஒருவராகவே கருதியதும் அவன் புகழ் தம் புகழாகக் கொண்டதும் வெளிப்படும். வல்லை - சாமர்த்தியம் உடையவன் எனவும் கொள்வர். 'வல்லை உன் கட்டுரைகள்' என்றார் ஆண்டாளும் (திருப்பாவை 15). விரைவிலே என்றும் இச்சொல்லிற்குப் பொருள் கொள்வர். தாமரை கண்களுக்கும் அகவிதழ் இமைகளுக்கும் உவமை. 35 |