சடாயு, சீதையைப்பற்றி வினவ, இலக்குவன் இயம்புதல் 2725. | பின்னரும், அப் பெரியவன் பெய் வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்; 'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால்' என்றான். |
பின்னரும் - பிறகும்; அப்பெரியவன் பெய் வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - அப்பெரியோராம் சடாயு, அணிந்த வளையல்களையுடைய அன்னம் போன்ற தெய்வப் பெண்ணாம் சீதையைப் பார்த்தவராய்; மன்னர் மன்னவன் மைந்த - சக்ரவர்த்தி தயரதனின் மகனே!; இவ்வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால் என்றான் - இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் இன்னாள் என்று சொல்வாய் என்றார். பெரியவன் - பண்பு, கல்வி, வாழ்நாள் முதலியவற்றால் பெரியவர். பெய் வளை அன்னம் என்பது இல்பொருள் உவமை. அணங்கு - உருவகம். நோக்கினான் - முற்றெச்சம். வாள்+நுதல்=வாணுதல், ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; அன்மொழித் தொகை. 36 |