2726.அல் இறுத்தன
     தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை
     என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும்
     புகன்று, தன்
சொல் இறுத்தனன்-
     தோன்றல்பின் தோன்றினான்.

    தோன்றல் பின் தோன்றினான் - இராமனுக்குப் பின் பிறந்த
தம்பியாம் இலக்குவன்; மேலைநாள் அல் இறுத்தன தாடகை ஆதியா -
முன் நாளில், இருள் ஒரு வடிவு எடுத்து வந்தாற் போன்ற தாடகையைக்
கொன்றது முதலாக; வில் இறுத்தது இடை என - சீதையை மணக்கச்
சனகன் அவையில் வில்லை முறித்தது நடுவாக; புல் இறுத்தது யாவும்
புகன்று -
வனம் அடைந்து புல்லிற் படுத்தது ஈறாக எல்லாவற்றையும் கூறி;
தன் சொல் இறுத்தனன் - தன்னுடைய வார்த்தையை முடித்தான்.

     தாடகையுடன் கொன்றது என்ற சொல்லையும் 'புல் இறுத்தது'
என்பதுடன் ஈறாக என்ற சொல்லையும் கூட்டுக. தோன்றல் - ஆடவரில்
சிறந்தவன்; தலைவன். தாடகை - மலையில் திரிபவள். 'வில்லிறுத்தங்கு
அரிவையை மேலை நாள் புல்லுறுத்து' எனப் பாடம் கொண்டு மிதிலையில்
சிவ வில்லை முறித்து அங்குச் சீதையை மணந்து கொண்டு எனப் பொருள்
காண்பர். 'புல்இறுத்தது' என்பதற்குக் காட்டில் தயரதனுக்குச் சரமக்கிரியை
செய்ததென்றும் கூறுவர். 'புல் இறுத்தன யாவும் எனவும் பாடம் கொண்டு
பொருந்த உண்டான எல்லாம் எனவும் உரைப்பர்.                  37