சடாயு வழி காட்ட பஞ்சவடியை அடைதல்

2729.'பெரிதும் நன்று; அப் பெருந்
     துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்;
     யான் அது
தெரிவுறுத்துவென்' என்று, அவர்,
     திண் சிறை
விரியும் நிழலில் செல்ல,
     விண் சென்றனன்.

    (அது கேட்ட சடாயு) பெரிதும் நன்று - (அகத்தியர் கூற்றுப்படி
அங்குச் சென்று தங்குவது) மிகவும் நன்மை தரத்தக்கது; அப்பெருந்துறை
வைகி நீர் மாதவம் புரிதிர் போதுமின் என்று -
அந்தப் பெரிய ஆற்றின்
துறையிடத்துத் தங்கி நீங்கள் சிறந்த தவத்தைப் புரிவீர்களாக வாருங்கள்;
யான் அது தெரிவுறுத்துவென் - யான் அவ்விடத்தை உங்களுக்குக்
காட்டுவேன் என்று கூறி; திண் சிறை விரியும் நிழலில் அவர் செல்ல
விண் சென்றனன் -
தன் வலிய சிறகுகளின் பரந்த நிழலின் கீழ் அவர்கள்
நடந்து வரும்படி வானில் பறந்து சென்றார்.

     'பெரிதும் நன்று' என்பது உலக நன்மை தோன்ற இராவண வதத்தைக்
குறிப்பால் உணர்த்தி நிற்கிறது. சடாயு வாயிலாக அதற்குத் தோற்றுவாய்
எழுந்தது எனலாம். இனிப் பெரிது நன்று அப்பெருந்துறை என ஆற்றின்
பெருமையை உரைப்பாரும் உளர். 'புனை சடை முடியின'ராகச் சடாயு

அவர்களைக் கண்டதால் (2700) 'புரிதிர் மாதவம்' என்றார். தம் மக்கள்
துயருறாமல் தந்தை காப்பது போல் அவர்கட்குச் சடாயு நிழல் தந்து
நின்றார்.

     'விண் சென்றனன்' என்ற தொடர் காப்பிய வளர்ச்சியில் இக்கதை
மாந்தர் இராவணனுடன் சீதையைக் காக்கப் போரிட்டு மடியும் நிலையைக்
குறிப்பாக உணர்த்துகிறது எனலாம்.                              40