2730.ஆய சூழல்
     அறிய உணர்த்திய
தூய சிந்தை அத் தோம்
     இல் குணத்தினான்
போய பின்னை, பொரு
     சிலை வீரரும்
ஏய சோலை இனிது
     சென்று எய்தினார்.

    ஆய சூழல் அறிய உணர்த்திய - அத்தகைய பஞ்சவடி எனும்
இடத்தை அறியும்படி தெரிவித்த; அத்தூய சிந்தை தோம்இல்
குணத்தினான் -
அந்தத் தூய்மையான மனமும் குற்றமற்ற நற்பண்புகளும்
கொண்ட சடாயு; போய பின்னை - அவ்விடம் விட்டுச் சென்ற பின்னர்;
பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார் - போர்
புரிதற்குரிய வில்லை உடைய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு
அமைந்திருந்த சோலையை மகிழ்ந்து போய் அடைந்தனர்.

     ஏய சோலை - அகத்தியர் அவர்களைத் தங்குமாறு கூறிய சோலை
எனலுமாம். தூய சிந்தை தோமில் குணத்தை முன்னரே தூய்மையான (2694)
என்ற பாடலில் உணர்த்தியுள்ளார் இத்தொடர் சடாயுவை நன்கு
விளக்குதற்குரிய நயமுடையது.                                  41