2731. | வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை, ஏற்பச் சிந்தனையிட்டு,- அவ் அரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன்-சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். | அவ் வரக்கர் தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் - அங்குள்ள அரக்கர்களது சிறப்பை ஐயமில்லாமல் நன்றாய் அறிந்த சடாயு; சிந்தனை இட்டு - ஆலோசித்து; வார் பொற் கொங்கை மருகியை மக்களை - கச்சணிந்த அழகிய மார்பகங்கள் கொண்ட தம் மருமகளாம் சீதையையும் தம் மக்களாம் இராமலக்குவரையும்; சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் - கூட்டிலுள்ள தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப் பறவை போலப் பாதுகாத்து வருகின்றார். பொன் - பொன்னிறம் எனலுமாம். சீர்ப்பு - வலிமை, மிகுதி முதலியவற்றின் சிறப்புக்கள். சிக்கு - தடையுமாம். சேக்கை - தங்கி இருக்கும் இடம். பார்ப்பு - சிறகு முளைக்காமல் தாயின் பாதுகாப்பை மட்டுமே நம்பியுள்ள இளங் குஞ்சுகள், பார்ப்பைப் பார்க்கும் பறவை என்றமையால் சடாயு அவர்களிடம் கொண்ட பற்றையும், பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் வெளிக்காட்டும். கழுகின் வேந்தனுக்கு அவர் இனத்தைச் சுட்டும் பறவை என்பதே பொருத்தமான உவமையாக அமைகிறது. அரக்கர் சீர்ப்பைத் தேறினன் என்றதால் அரக்கரால் அவர்கட்குத் துன்பம் வரலாகாது என்ற கருத்தைச் சுட்டும். 42 |