கோதாவரியின் பொலிவு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

2732. புவியினுக்கு அணிஆய், ஆன்ற பொருள்
     தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி,
     ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென்
     ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதாவரியினை
     வீரர் கண்டார்.

    புவியினுக்கு அணியாய் - பூமிக்கு ஓர் அணிகலன் போன்று
அழகூட்டுவதாய் அமைந்து; ஆன்ற பொருள் தந்து - சிறந்த
பொருள்களைக் கொடுத்து; புலத்திற்று ஆகி - வயல்களுக்குப்
பயன்படுவதாக ஆகி; அவி அகத்துறைகள் தாங்கி - தன்னுள் அமைந்த
பல நீர்த் துறைகளைக் கொண்டு; ஐந்திணை நெறி அளாவி - குறிஞ்சி
முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச்
சென்று; சவி உறத் தெளிந்து - செவ்வையாய் தெளிவுடையதாகி;
தண்ணென் ஒழுக்கமும் தழுவி - குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்;
சான்றோர் கவியென(க்)கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் -
கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி
எனும் ஆற்றை இராமலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்.

     இனி, சான்றோர் கவியைக் குறிக்குமிடத்து; புவியினுக்கு அணியாய் -
உலக மக்களுக்குப் பல அலங்காரமாகி; ஆன்ற பொருள் தந்து - சிறந்த
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை உணர்த்தி;
புலத்திற்று ஆகி - அறிவில் தங்கி; அவி அகத்துறைகள் தாங்கி -
செவ்விதாய் அமைந்த அகப் பொருள் துறைகளை ஏற்று; ஐந்திணை நெறி
அளாவி -
குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து அக
ஒழுக்கங்கள் விரவப் பெற்று; சவி உறத் தெளிந்து - விளங்குமாறு
பொருள் தெளிவுற அமைந்து; தண்ணென் ஒழுக்கமும் தழுவி -
நல்லொழுக்கத்தையும் உணர்த்தி; சான்றோர் கவி - புலமையால்
நிறைந்தவர் செய்யுள் (எனப் பொருள்படும்).

     'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பதற்கேற்பப் புவியினுக்கு
அணியாக அமைகிறது. நிலமகள் மார்பிற்கு ஆரம் போல் பொலிகிறது
எனலுமாம். ஆன்ற பொருள் - மலைபடு பொருளாம் தேக்கு, சந்தனம்
அகில் பலவகை மணிகள் முதலியவை "அவி அகத் துறைகள் தாங்கி"
என்பதற்கு அவி உணவைத் தேவர்க்களிக்கும் வேள்விச் சாலைகளைத் தன்
கரையில் கொண்டு - என்பர். சவி - ஒளி தண்ணென் ஒழுக்கம் -
எப்போதும் குளிர்ந்த நீரோடிக் கொண்டிருக்கும் ஒழுக்கு. புலத்திற்றாதல்
என்பதற்கு வெள்ளப் பெருக்கினாலும் வாய்க்கால் வழியாகவும் பரவி
நிறைதல் என்பர். இவையெல்லாம் கோதாவரி பற்றியது.

     இனிச் சான்றோர் கவி பற்றிக் காணும்போது அணி என்பதை
நன்னூலாரும் வல்லோர் அணி பெறச் செய்வன செய்யுள் (நன். 268) என்ற
நூற்பாவால் உணர்த்துவர். புலத்திற்றாதல் - தன்னைக் கற்போர்க்கு
நுண்ணறிவூட்டி அதனால் ஆய்வு செய்யச் செய்ய நன்கு புலப்படும்
ஆழ்ந்த பொருள் கொண்டு அறிவுக்கு உரியது ஆதல், அகத்துறை -
அகப்பொருளாம் களவு, கற்பு எனும் ஒழுக்கங்களைக் கூறுதல். புறப்
பொருளினும் அகப் பொருள் கேட்போர் உள்ளத்தைக் கவரும் பான்மை
கொண்டதால் இதனை முதன்மைப்படுத்திக் கூறினார். போசராசனும் சுவை
பலவற்றிலும் இன்பச் சுவை ஒன்றனையே மிகுத்துக் கூறியதை இங்கு
நினைவு கூரலாம். ஐந்திணை நெறி - புணர்தல் இருத்தல், பிரிதல் ஊடல்,
இரங்கல் என்பவையாம். சவியுறத் தெளிதல் - மயக்கத்திற்கு இடமில்லாமல்
விளங்க வைத்தல். தண்ணென் ஒழுக்கம் என்பதற்கு மெல்லோசையுடன்
தட்டுப்பாடு இன்றிச் செல்லும் இனிய நடைப் போக்கு என்பர்.

     வீரக் கண்டார் என ஆடவர் மேல் வைத்துக் கூறினும் சீதையும்
கண்டாள் எனக் கொள்க.

     இவ்வாறு கோதாவரி ஆறும் சான்றோர் கவியும், அணி, பொருள்,
துறை, திணை முதலியன கொண்டு ஒழுகுவதாய், இரட்டுற மொழியும்
திறனால் சிலேடை அணியின் சிறப்பை நன்குணரலாம்.                 1