2733. | வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய, வாசம் உண்டு உறை குவளை ஒண்கண் ஒருங்குற நோக்கி, ஊழின் தெண்திரைக் கரத்தின் வாரி, திருமலர் தூவி, செல்வர்க் கண்டு அடி பணிவதென்ன, பொலிந்தது கடவுள்யாறு | கடவுள் யாறு - அந்தத் தெய்வத் தன்மை கொண்ட கோதாவரி ஆறு; வண்டு உறை கமலச் செவ்வி வாள்முகம் பொலிய - வண்டுகள் தங்கும் தாமரை மலர் ஆகிய அழகிய ஒளி பொருந்திய முகம் மலர்ந்து விளங்க; வாசம் உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி - நறுமணத்தை உட்கொண்டு அங்கே உள்ள குவளை மலர்களாம் ஒளி மிக்க கண்களால் ஒரு முகமாகப் பார்த்து; ஊழின் தெண்திரைக் கரத்தின் - முறையே வரிசையாக வரும் தெளிந்த அலைகளாம் கைகளால்; திருமலர் வாரி தூவி - அழகிய மலர்களை ஒருசேர எடுத்துச் சொரிந்து; செல்வர்க் கண்டு அடிபணிவ தென்ன(ப்) பொலிந்தது - இராமன் முதலியவரைக் கண்டு அவர்களின் திருவடிகளை வணங்குவது போல விளங்கிற்று. ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாகிய கோதாவரியைக் கடவுள் யாறு என்றார். பெரியோரைக் காணும் போது முகமலர்ந்து மலர் தூவி அடி வணங்குவது முறைமையாகும். அதன்படி இராமன் முதலோரைக் கண்ட கோதாவரி முகமாம் தாமரை பொலியக் கண்ணாம் குவளை நோக்க அலைகளாம் கைகளால் மலர் தூவி வணங்கியதாக உருவகிக்கப் பெற்றுள்ளது. ஆறுகளில் தாமரை, குவளை இருப்பதாகக் கற்பனை செய்வது கவி மரபு. 'புள்ளார் புறவிற் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட நள்ளார் கமலம் முகங் காட்டும் நறையூர்' என்ற ஆழ்வார் வாக்கும் (பெரிய திருமொழி 6,7,3) 'தெண்ணீர்ப் பொன்னி திரைக்கை யாலடி வருட' என்ற பாசுர வரியும் (பெருமாள் திருமொழி 1) ஒப்பிடத்தக்கன. அயோத்தியா காண்டக் குகப் படலத்தில் 'தெண்திரை எனும் நிமிர்கையால் ஏந்தினாள்' (1988) எனக் கங்கையின் அலையைக் கையாக உருவகம் செய்ததையும் எண்ணிப் பார்க்க இடமுளது. ஊழின் தூவி என்பதற்குப் பெரியோர்க்கு அருச்சனை செய்யும் முறைப்படி அருச்சித்து எனவும் கூறுவர். 2 |