2734.எழுவுறு காதலாரின் இரைத்து
     இரைத்து, ஏங்கி ஏங்கி,
பழுவ நாள் குவளைச் செவ்விக்
     கண்பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து
     உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு
     நீர் ஆறு மன்னோ

    அவ் அலங்கு நீர் ஆறு - அந்த அசைந்து ஓடுகிற நீரையுடைய
கோதாவரி எனும் நதி; வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை
வருத்தம் நோக்கி -
குற்றம் இல்லாத மெய்ம்மை மொழியுடைய
இராமலக்குவர் காட்டில் வந்து வாழும் துன்ப நிலையைப் பார்த்து; எழுவுறு
காதலாரின் -
அவர்கள் மேல் எழுந்த அன்பினார்போல்; இரைத்து
இரைத்து ஏங்கி ஏங்கி -
அடிக்கடி பெருமூச்சு விட்டு மிகவும் இரங்கி;
பழுவ நாள் குவளைச் செவ்விக் கண்பனி பரந்து சோர - தொகுதியாக
உள்ள அன்றலர்ந்த நீல மலர்கள் ஆகிய அழகுள்ள கண்களிலிருந்து நீர்த்
துளிகள் எங்கும் பரவி வழிய; அழுவது ஒத்தது - புலம்பி அழுவதைப்
போன்றிருந்தது; ஆல், மன், ஓ - என்பன அசைகள்.

     அலங்குதல் - அசைந்தாடுதல் வழுஇலா வாய்மை என்பது
தண்டகாரணிய முனிவர்களுக்கு, அவர்களை அரக்கரின் கொடுமையிலிருந்து
விடுவிக்கக் கூறிய மொழிகளை நிறை வேற்ற நிற்பவர் எனலாம். மேலும்,
தம் தந்தை கைகேயிக்குக் கொடுத்த வரத்தின் மெய்ம்மையைக்காக்க
வனம்புகுந்த மைந்தர் எனலும் பொருந்தும் கண்ணுக்குக் குவளை; முந்திய
பாடலில் (2733) 'குவளை ஒண் கண்' எனக் கூறியதை நோக்குக. கண்பனி -
கண்ணீர். பழுவம் என்பது காடு. இது ஆகுபெயராய்த் தொகுதியை
உணர்த்திற்று. குவளைக்காடு எனலுமாம். பின்னர் 'எல்லி அம் குவளைக்
கானத்து' (2737) எனவும் வருதல் காண்க. குவளை மலரில் தோன்றும் தேன்
வழிவதைக் கண்ணீர் (கள்+நீர்) வடிப்பதாகக் கொள்வாரும் உளர்.
கோதாவரியைச் சேர்ந்த காலம் பனிக்காலத்திற்குச் சற்று முந்தியது.
ஆதலால் பனி என்பதற்கு பனி நீர்த்துளி எனவும் கூறுவர்.

     இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி எனும் அடுக்குகள் மிகுதி குறித்து
நின்றன. உருவகமும், தற்குறிப்பேற்ற அணியும் இப்பாடலில்
அமைந்துள்ளன.                                               3