2737.வில் இயல் தடக் கை வீரன், வீங்கு நீர்
     ஆற்றின் பாங்கர்,
வல்லிகள் நுடங்கக் கண்டான்,
     மங்கைதன் மருங்குல் நோக்க,
எல்லிஅம் குவளைக் கானத்து, இடை இடை
     மலர்ந்து நின்ற
அல்லிஅம் கமலம் கண்டாள், அண்ணல்தன்
     வடிவம் கண்டாள்.

    வில்லியல் தடக்கை வீரன் - வில் வித்தையில் தேர்ச்சி பெற்ற
நீண்ட கைகளை உடைய வீரனான இராமன்; வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
-
மிகுந்த நீரையுடைய கோதாவரி நதியிடத்தே; வல்லிகள் நுடங்கக்
கண்டான் -
கொடிகள் அசைவதைப் பார்த்து; மங்கைதன் மருங்குல்
நோக்க -
சீதையின் (துவளும்) இடையைப் பார்க்க; (அச்சீதை) எல்லி
அம் குவளைக் கானத்து இடை இடை -
இருள் போல் கறுத்த அழகிய
நீலமலர்த் தொகுதியின் நடுநடுவே; மலர்ந்து நின்ற அல்லி அம் கமலம்
கண்டாள் -
பூத்து விளங்கிய அகவிதழ்களை உடைய அழகிய தாமரை
மலர்களைப் பார்த்து; அண்ணல் தன் வடிவம் கண்டாள் - இராமனின்
(கரிய) திருமேனியை நோக்கினாள்.

     வில் இயல் தடக்கை - வில் பொருந்திய வலிய கை எனவுமாம்.
எல்லி அம் குவளைக் கானத்து - இரவில் மலர்ந்து விளங்கும் அழகிய
குவளைக் காட்டிடத்து என்றும் கூறுவர். குவளை இரவில் மலரும் மலர்.
இராமன் கொடியைக் கண்டு ஒப்புமையால் சீதையின் இடையை
நினைத்தான். குவளை மலர்களின் இடையே மலர்ந்த தாமரை மலர்களைக்
கண்டு

இராமனின் வடிவை, சீதை உற்று நோக்கினாள். குவளை மலர்க் கூட்டத்தின்
இடையே மலர்ந்த தாமரை மலர்கள் இராமனின் கரிய மேனியில் சிவந்து
விளங்கும் கண் கால் முகம் முதலிய உறுப்புகளை ஒத்திருந்தன என்க.

     பாங்கர் - பாங்கு என்ற சொல்லின் ஈற்றுப் போலி. இப்பாடலும்
நினைப்பணி.                                                  6