2738. | அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர், பனி தரு தெய்வப் 'பஞ்சவடி' எனும், பருவச் சோலைத் தனி இடம் அதனை நண்ணி, தம்பியால் சமைக்கப்பட்ட இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால், |
அனையது ஓர் தன்மை ஆன - அத்தகைய ஓர் (அழகிய) தன்மையுடைய; அருவி நீர் ஆற்றின் பாங்கர் - அருவியாகப் பெருகிய நீருடைய கோதாவரி நதியின் அருகே; பனிதரு தெய்வப் பஞ்சவடி எனும் - குளிர்ச்சி பொருந்திய தெய்வத் தன்மை பொருந்திய பஞ்சவடி என்று அழைக்கப் பெறும்; பருவச் சோலைத் தனி இடம் அதனை நண்ணி - காலத்தால் மலரும் சோலையாகிய ஒப்பற்ற அந்த இடத்தை அடைந்து; தம்பியால் சமைக்கப்பட்ட இனிய பூஞ்சாலை எய்தி - இலக்குவனால் அமைக்கப்பட்ட இன்பம் நிறைந்த அழகிய பர்ண சாலையை அடைந்து; இராமன் இருந்தனன் - இராமன் தங்கியிருந்தான்; இப்பால் - இதன்பின். முன்னர் அகத்தியப் படலத்தில் 'ஓங்கும் மரன் ஓங்கி..... உறையுள் பஞ்சவடி' (2687) என்பதை இத்துடன் எண்ண இடமுளது. பூஞ்சாலை - அழகிய தழைகளால் வேய்ந்த தவச்சாலை. இராமனும் சீதையும் ஆற்று வளனை நுகர்ந்து இன்பம் நுகர்ந்த போது இலக்குவன் இராமனின் கட்டளைக்கேற்பச் சாலை அமைத்தனன் என்பது குறிப்பால் அறியும் செய்தி. 'பனிதரு... பஞ்சவடி' என்றதால் இனிமேல் வரப்போகும் துன்பத்தைப் 'பனி' என்ற தொனியால் உணர்த்தி நின்றது. (பனி - வருத்தம்). இச் செய்யுளுடன் பஞ்சவடிப் படலம் முடியும் என்ற குறிப்பு சில சுவடிகளில் காணப்பெறும். 7 |