கலிவிருத்தம்

2739. நீல மா மணி நிற
     நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும்
     மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்
     பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய
     நோய் அனாள்,

    நீல மா மணி நிற நிருதர் வேந்தனை - சிறந்த நீல ரத்தினம்
போன்ற கருநிறமுடைய இராக்கதர் அரசனாம் இராவணனை; மூல நாசம்
பெற முடிக்கும் மொய்ம்பினாள் -
வேரோடு அழிவு அடையுமாறு சூழ்ச்சி
செய்து அழிக்கும் வலிமை உடையவளும்; மேலைநாள் உயிரொடும்
பிறந்து -
முற்காலத்தில் உயிரோடு கூடவே தோன்றி; தான் விளை காலம்
ஓர்ந்து -
தான் செயலியற்றுதற்கு உரிய காலத்தை எதிர்பார்த்து எண்ணி;
உடன் உறை கடிய நோய் அனாள் - அவ்வுயிரோடு கூடவே தங்கும்
கொடிய வியாதியைப் போன்றவளும்; (ஆகிய சூர்ப்பணகை)

     இச்செய்யுள் மேற்றொடர்ந்து வரும் செய்யுளில் (2741) உள்ள
'எய்தினள்' என்ற வினைமுற்றுடன் முடியும். நீலமாமணி இராவணனின் கரு
நிறத்திற்கு உவமை. நிருதர் என்பவர் நிருதி எனும் தென்மேற்குத்
திசைக்குக் காவல் பூண்ட தெய்வத்தின் வழி வந்தவர் என்பர். வேரோடு
அழிதல் என்பது குலம் முற்றிலும் அற்றுப் போதலைக் குறிக்கும். முன்பு -
உடல் வலிமை. மேல் என்பது ஐகாரச் சாரியை பெற்று மேலை என
ஆயிற்று. உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்ற வழக்கிற்கேற்பச்
சூர்ப்பணகையை 'உடன் உறை கடிய நோய் அனாள்' என்றார். கரன்
வதைப் படலத்தில் இக்கருத்தை வலியுறுத்தல் போன்று 'உடன் உறைந்து
உயிர்கள் தம்மை அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக'
(2930) எனக் குறிப்பிடப் பெறுவதை எண்ணிப் பார்க்கலாம்.

     முன்னர் 'இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும்
கொடு மனக் கூனி தோன்றினாள்' (1445) என்றும் அதற்கு முன் இராமனின்
அம்பால் தாடகை வீழ்ந்த போது 'முடியுடை அரக்கற்கு, அந்நாள், முந்தி
உற்பாதம் ஆக, படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்'
(390) என்றும் கொடியவர்களை இராவணனோடு தொடர்புபடுத்திச் செல்லும்
காப்பிய நெறி எண்ணி மகிழ்தற்குரியது.

     இச் செய்யுள் முதல் 'சூர்ப்பநகி மூக்கரி படலம்' என்றும் 'சூர்ப்பணகைப் படலம்' என்றும் காணப் பெறும்.                                   8