2740. | செம் பராகம் படச் செறிந்த கூந்தலாள், வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள், உம்பர் ஆனவர்க்கும், ஒண் தவர்க்கும், ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும், ஓர் இறுதி ஈட்டுவாள், |
செம்பு அராகம் பட - தாமிரத்தின் செந்நிறம் போலச் செந்நிறம் பொருந்த; செறிந்த கூந்தலாள் - அடர்ந்த தலை மயிரை உடையவளும்; வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் - வெப்பம் கொள்ளும் (காம) ஆசை ஒப்பிலாது வளர்ந்து தழைத்த உடம்பை உடையவளுமான சூர்ப்பணகை; உம்பர் ஆனவர்க்கும் - தேவர்களுக்கும்; ஒண் தவர்க்கும் - சிறந்த தவத்தை உடைய முனிவர்களுக்கும்; இம்பர் ஆனவர்க்கும் - இவ்வுலக மக்களுக்கும்; ஓர் இறுதி ஈட்டுவாள் - ஒப்பற்ற ஓர் அழிவைச் செய்ய வல்லவளும் ஆன (சூர்ப்பணகை), செம்பராகம் படச் செறிந்த கூந்தலாள் - செம்பட்டை மயிருடையவள். செந்நிறம் இவள் கூந்தல் முன் நிற்க மாட்டாது அழிவுறும்படி. அடர்ந்த கூந்தலுடையவள் என்றுமாம். செம் - பராகம் எனப் பிரித்துச் சிவந்த புழுதி நிறம் பொருந்த எனக் கூறுவாருமுளர். 'வெம்ப ராகு' எனக் கொண்டு திருமாலை வஞ்சித்து அமுது பெறக் கருதிய இராகு போல் சூர்ப்பணகை இராமனை வஞ்சித்து இன்பம் பெறக் கருதினள் என்பாருமுளர். இராகுவின் கொடுமை இவளுக்கும் ஏற்புடைத்து. இராமவதாரத்தின் பயன் சூர்ப்பணகை வாயிலாக நடைபெற்றது என்பதை முன் செய்யுளாலும் (2739) இச் செய்யுளாலும் உணர்த்துகிறார். இது போன்று முன்னரும் 'அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் தூய் மொழி மடமான்' எனக் கைகேயியைப் பற்றிக் கூறியமை (1484) காண்க. இவ்வாறே பின்னர் இலக்குவன் பற்றிக் கூறும்போது 'தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான்' (3337) என்பதால் இக்காப்பிய நெறி புலப்படும் அவர்களின் செய்கை உலக நன்மைக்குக் காரணமாயிற்று என இதனால் உணரலாம். இதனடிப்படையில் 'ஓர் உறுதி ஈட்டுவாள்' எனப் பாடம் கொண்டு ஒப்பற்ற நன்மையைத் தேடித் தருவாள் என்று பொருள் காண்பர். 9 |