2741.வெய்யது ஓர் காரணம்
     உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ்
     வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம்
     நுழையும் நோன்மையாள்,-
எய்தினள், இராகவன்
     இருந்த சூழல்வாய்.

    வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் - கொடிதான ஒரு
காரணம் தன்னிடம் உள்ளதைப் பொருந்தியவளாய்; (அதனால்) தமியள்
அவ்வனத்து வைகலும் வைகுவாள் -
தனியளாய் அக்காட்டில் நாளும்
வாழ்ந்து வருபவளாய்; இவ் உலகு எலாம் நொய்தின் நுழையும்
நோன்மையாள் -
இவ்வுலகம் முழுவதும் விரைவாகப் புகுந்து செலும்
வலிமையுடையவளாய் உள்ள சூர்ப்பணகை; இராகவன் இருந்த சூழல்வாய்
எய்தினள் -
இராமன் தங்கிய பூஞ்சாலையிடத்து வந்தாள்.

     வெய்யதோர் காரணம் - இராவணன் சூர்ப்பணகையின் கணவனாம்
வித்யுச்சிவனைக் கொன்ற கொடுமைக்குப் பழி வாங்குதல் காரணமாம். இனிச்
சூர்ப்பணகை கொண்ட கொடிய காம இச்சையைக் குறிப்பாகக் காரணம்
எனக் கூறியதுமாம். மேலும் சூர்ப்பணகை கணவனை இழந்து வருந்திய
போது இராவணனின் விருப்பப்படி கரன் முதலிய இராக்கதர் துணையோடு
தண்டகாரணியத்தில் சனத்தானம் எனுமிடத்தில் தான் விரும்பிய
போதெல்லாம் திரிந்து முனிவர்களை வருத்த வேண்டும் என்ற
காரணமுமாம். இராவணன் முதலியோர் குலத்துடன் அழியும் கொடிய
ஊழ்வினை காரணம் எனலுமாம். இராமன் சீதையைப் பிரியும்படியான
காரணமுமாம் தமியள் என்பது அவ்வனம் முழுதும் தனியே உலவிவருபவள்
என்றும், பெண்களுக்குரிய அடக்கம், கட்டுப்பாடு இன்றி விருப்பப்படி
திரிபவள் என்றுமாம். இரகு என்ற அரசன் மரபில் தோன்றியதால் இராகவன்
என்ற பெயர் பெற்றான். சூழல் வாய் - என்பது ஏழன் உருபாய் இடப்
பொருளுணர்த்தி நின்றது.                                        10