2742. | எண் தகும் இமையவர், 'அரக்கர் எங்கள்மேல் விண்டனர்; விலக்குதி' என்ன, மேலைநாள் அண்டசத்து அருந் துயில் துறந்த ஐயனைக் கண்டனள், தன் கிளைக்கு இறுதி காட்டுவாள். |
மேலைநாள் எண்தகும் இமையவர் அரக்கர் எங்கள்மேல் விண்டனர் விலக்குதி என்ன - முன்னொரு காலத்தில் நன்கு மதிக்கத்தக்க தேவர்கள் 'எங்களை அரக்கர்கள் பகைத்தனர். அவர்கள் தரும் துன்பத்தை நீக்குவாய்' என வேண்ட; (அதனால்), அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனை - ஆதிசேடன் என்ற பாம்பின் மீது அரிய யோக நித்திரை செய்வதை விட்டு விட்டு உலகில் அவதரித்த இராமனை; தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் கண்டனள் - தன் சுற்றத்தாராம் அரக்கர்களுக்கு முடிவை உண்டாக்குபவளான சூர்ப்பணகை பார்த்தாள். எண் - புகழுமாம். எண்தரும் என்பதற்கு முப்பத்து முக்கோடி எனும் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்றும் உரைப்பர். விண்டனர் - வேறுபட்டனர் என்ற பொருள் பகைமை கொண்டதைக் குறிக்கும். அண்டசம் எனின் முட்டை; அதிலிருந்து தோன்றிய பாம்பைக் குறிக்கும். கிளைக் கிறுதி காட்டுவாள் ஐயனைக் கண்டனள் என்பதால் இராமன் மேல் இவள் கொண்ட காமத்தால் அரக்கர் குலமே அழியப் போவதைச் சுட்டி நிற்கிறது. தேவர்கள் அரக்கர்களின் கொடுமையால் திருமாலை வேண்டியதால் இராமனாக அவதரித்ததைப் பாலகாண்டத் திருஅவதாரப் படலம் விவரித்தது (184-207) மெய்மறந்து மக்கள் தூங்குவது போலன்றி எல்லா உயிர்களையும் காப்பாற்றுவதை எண்ணியவாறே உறங்கும் உறக்கத்தை அறிதுயில் என்பர். காட்டுவாள் என்பதை முற்றெச்சமாகக் கொண்டு தன் சுற்றத்திற்கு அழிவை அடைவிப்பவளாய் இராமனைக் கண்டாள் எனக் கொள்வாரும் உளர். 11 |