இராமன் அழகைச் சூர்ப்பணகை வியத்தல்

2743.'சிந்தையின் உறைபவற்கு
     உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம்
     நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று;
     நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு'
     என்று உன்னுவாள்.

    சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்தது - (எல்லோருடைய)
மனத்திலும் தங்குபவனாகிய மன்மதனுக்கு வடிவம் ஒழிந்து போயிற்று;
இந்திரற்கு ஆயிரம் நயனம் - தேவேந்திரனுக்கு ஆயிரம் கண்கள்
(உண்டு); ஈசற்கு முந்திய மலர்க்கண் ஓர் மூன்று - சிவனுக்கு சிறந்த
தாமரை மலர் போன்ற கண்கள் மூன்றாம்; உந்தியில் உலகு அளித்தாற்கு
நான்கு தோள் -
தன்திருநாபியில் உலகங்களைத் தந்தருளிய திருமாலுக்குத்
தோள்கள் நான்காம்; என்று உன்னுவாள் - எனச் சூர்ப்பணகை
நினைப்பாள்.

     இராமனின் அழகைக் கண்டு வியந்த சூர்ப்பணகை 'இவன்
மன்மதனோ?' என முதலில் ஐயுற்றாள். 'மன்மதனுக்கு வடிவமில்லை.
இவனோ வடிவுடையவன். எனவே இவன் மன்மதனன்று' எனத் தெளிந்தாள்.
பின்னர் 'இவன் இந்திரனோ, சிவனோ, திருமாலோ' என ஐயுற்றபின்
முறையே ஆயிரங் கண்ணும், மூன்று கண்ணும். நான்கு கையும்
இல்லாததால் அவர்கள் அல்லன் எனத் தெளிந்தாள். அகப்பொருள்
துறையில் தலைவன் தலைவியைக் கண்டு ஐயுறலுக்கு மாறாக இங்குப் பெண்
மற்றோர் ஆணைக் கண்டதும் முதலில் ஐயுறுவதால் இது பொருந்தாக்
காமம் ஆகிய பெருந்திணையின் பாற்படும்.

     மன்மதன் உருவமற்ற நிலை எய்தியதை (339) விசுவாமித்திரன்
வாயிலாக அறிகிறோம். அத்துடன் அடுத்த பாட்டிலும் 'கற்றை அம்
சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன்' (2744) எனவும் காணப் பெறும்.
சிவனுக்குச் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்கள். முறையே
செந்தாமரை, வெண்டாமரை, செவ்வல்லி ஆகிய மலர்கள் போன்ற
கண்களாகப் புலப்படுவதால் 'மலர்க்கண் ஓர் மூன்று' என வந்துள்ளது.

     இப்பாடலில் ஐயமும் ஐயமறுப்பும் அமைந்துள்ளன. ஆல் - அசை. 12