2744.'கற்றை அம் சடையவன்
     கண்ணின் காய்தலால்
இற்றவன், அன்று தொட்டு
     இன்றுகாறும், தான்
நல் தவம் இயற்றி, அவ்
     அனங்கன், நல் உருப்
பெற்றன னாம்' எனப்
     பெயர்த்தும் எண்ணுவாள்

    கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன் -
தொகுதியான அழகிய சடையை உடைய சிவனின் நெற்றிக் கண்ணால்
எரித்தலால் உடல் அழியப் பெற்றவனான; அவ் அனங்கன் தான் - அந்த
மன்மதனே; அன்று தொட்டு இன்று காறும் நல் தவம் இயற்றி - தன்
உடல் அழிந்த அன்று முதல் இன்று வரை நல்ல தவங்களைச் செய்து; நல்
உருப் பெற்றனனாம் -
இந்த நல்ல வடிவைப் பெற்றனன் ஆகும்; எனப்
பெயர்த்தும் எண்ணுவாள் -
என்று மீண்டும் சூர்ப்பணகை நினைப்பாள்.

     முன்னர் மன்மதனோ என்று ஐயுற்று அவன் வடிவம் தான் சிவன்
நெற்றிக் கண்ணால் எரிந்து விட்டதே என எண்ணியவள் இந்த வடிவைப்
பெறுதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என எண்ணுகிறாள்.
அனங்கன் - அங்கம் இல்லாத மன்மதன். தான் - துணிவுப்
பொருளுணர்த்தும் இடைச்சொல். இது தற்குறிப்பேற்ற அணி.

     மன்மதன் அனங்கனான கதை: முன்னர்க் கைலாயத்தில் சனகாதி
முனிவர்க்குச் சிவன் யோக நிலையை உணர்த்த யோக நிலையில் இருந்த
போது தேவர்களின் ஏவலான் மன்மதன் சிவன் மீது மலர்ப்பாணங்களை
எறிய அதனால் சினங் கொண்ட சிவன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை
எரித்தார்.                                                    13