2745. | 'தரங்களின் அமைந்து, தாழ்ந்து, அழகின் சார்பின; மரங்களும் நிகர்க்கல; மலையும் புல்லிய; உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் கரங்களே, இவன் மணிக் கரம் என்று உன்னுவாள். |
இவன் மணிக்கரம் - இவனது அழகிய கைகள்; தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின - சிறப்பில் உத்தம இலக்கணம் கூறியபடி பொருந்தி (முழந்தாள் அளவும்) நீண்டு அழகுக்குத் தங்குமிடம் ஆக உள்ளன; மரங்களும் நிகர்க்கல - (பெரியபனை) மரங்களும் ஒப்பானவை அல்ல; மலையும் புல்லிய - (உவமையில்) மலைகளும் இழிந்தவை ஆம்; உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் கரங்களே - வலிமைகளால் மிக்க திக்குகளைத் தாங்கும் யானைகளின் துதிக்கைகளே ஆம்; என்று உன்னுவாள் - எனச் சூர்ப்பணகை எண்ணுவாள் ஆடவர் கரங்களுக்கு வலிமையாலும் நிறத்தாலும் ஒப்புமை உடைய பனை மரங்களும் இவன் நீல நிறமுள்ள வலிய கரங்களுக்கு ஒப்பாகமாட்டா. சிலர் 'தாழ்ந்துயர்ந்த தாலமா மரங்களும் நிகர்க்கில' என வேறு பாடம் கொள்வர் செழித்துப் பருத்து வளர்ந்து உருண்டு நீண்ட தன்மையால் மரத்தைக் கைக்கு உவமை கூறுவர். ஆயினும் அவையும் ஈடாகா; அழித்தற்கரிய வலிமையாலும் தோற்றப் பெருமையாலும் மலையைக் கைக்கு உவமை கூறுவர். அதுவும் இங்குப் பொருந்தாது எனச் சூர்ப்பணகை இராமனின் மணிக்கர அழகில் தோய்கின்றாள். எல்லா இலக்கணமும் பொருந்திய இவன் கைகளுக்குத் திக்கு யானைகளின் துதிக்கைகளே பொருந்தும் என நினைக்கிறாள். இராமன் மேனி அழகைப் பற்றிச் சீதையிடம் அனுமன் 'நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின் கோடு உறுகரம் என, சிறிது கூறலாம், தோடு உறு மலர் எனச் சுரும்பு சுற்று அறாத் தாள் தொடு தடக்கை' (5274) எனக் கூறிய மொழிகளை இத்துடன் ஒப்பிடலாம் கரங்களே - ஏகாரம் துணிவுப் பொருளது. 14 |