2746. | 'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும் கல்மலை நிகர்க்கல; கனிந்த நீலத்தின் நல் மலை அல்லது, நாம மேருவும் பொன்மலை ஆதலால், பொருவலாது' என்பாள். |
வில்மலை வல்லவன் வீரத் தோளொடும் கல் மலை நிகர்க்கல - வில்லால் போர் செய்ய வல்லவனாம் இவனுடைய வீரம் பொருந்திய தோள்களோடும் வெறும் கல்லால் அமைந்த மலைகள் ஒப்பு ஆகா; கனிந்த நீலத்தின் நல் மலை அல்லது - முதிர்ந்த நீல ரத்தின மயமான அழகிய மலை அல்லாமல்; நாம மேருவும் பொன் மலை ஆதலால் பொருவலாது என்பாள் - புகழ்மிக்க மேரு மலையும் பொன்மயமான மலை ஆதலின் ஒப்பாகாது எனச் சூர்ப்பணகை சொல்லுவாள். மலை வல்லவன் - மலைதலில் வல்லவன் மலைய எனும் செயவென் எச்சம் தொக்கு நின்றது என்பர் மலை என்பதனை முதனிலைத் தொழிற் பெயராகவும் கொள்வர். மலை வில் என மாற்றி மலை போன்ற வலிய பெரிய வில் எனவும் கொள்வர். இவன் தோளுக்குக் கல் மலையும், பொன் மலையும் வலிமையாலும் நிறத்தாலும் ஒப்பாகா. இந்திர நீல மலையே ஒப்பாகும். நாமம் - புகழ், பெருமை. அச்சத்தையூட்டும் மலை எனினும் அமையும். 15 |