2747. | தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின், நீளிய அல்ல கண்; நெடியமார்பு!' என்பாள். |
தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் - நாளத்தோடு கூடி உயர்ந்த செந்தாமரை மலரின் இதழ்களுடன் ஒளி சிறந்து விளங்கும் கண்களையும் மலை போன்று சிறந்து விளங்கும் தோற்றத்தையும் உடைய இவனது; தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் - ஒரு தோளோடு மற்றொரு தோளை அளாவத் தொடர்ச்சியாகப் பார்த்தால்; கண் நீளிய அல்ல - என் கண்கள் நீண்டன அல்ல; மார்பு நெடிய என்பாள் - மார்பு நீண்டு பரந்துள்ளது என்று சொல்வாள். நீர்ப்பூக்களில் தாமரை மலரே நீர்மட்டத்திற்கு மேலே உயர்ந்து தோன்றும் நாளங்களை உடையது. எனவே தாளுயர் தாமரை எனப்பட்டது. தளம் - பூவிதழ். கேள் - கேழ் என்பதன் திரிபு. கேள் என்பதற்கு ஒற்றுமை எனவும் பொருள் காண்பர். தாமரை இதழ் செவ்வரி படர்ந்து குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் அழகுடையதால் இராமனின் கண்களுக்கு உவமை கூறப்பெற்றது. தோள்கள் இரண்டிற்கும் நடுவிலுள்ள மார்பின் பரப்பு முழுவதையும் ஒரே சமயத்தில் பார்க்கக் கூடாதவாறு பரந்து விரிந்து இருப்பதால் 'நீளிய அல்ல கண்' என்றாள். உத்தம இலக்கணப்படி இராமனின் மார்பின் பரப்பளவு இத்தன்மையது எனக் கூறப் பெற்றுளது. பறிக்கப்படாத மலர் என்பதனைச் சுட்டத் 'தாளுயர் தாமரை' எனலுமாம். கண் - கண்ணின் பார்வைக்கு இலக்கணை. இப்பாடலில் உவமை அணி உளது. 16 |