2748. அதிகம் நின்று ஒளிரும்
     இவ் அழகன் வாள்முகம்
பொதி அவிழ் தாமரைப்
     பூவை ஒப்பதோ?
கதிர் மதி ஆம் எனின்
     கலைகள் தேயும்; அம்
மதி எனின், மதிக்கும்
     ஓர் மறு உண்டு' என்னுமால்

    அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள்முகம் - மிகுதியாக
நிலை பெற்று எப்போதும் ஒளிவீசும் இந்த அழகியவனின் ஒளிமிக்க முகம்;
பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ - மொட்டு அவிழ்ந்து மலரும்
தாமரை மலரை ஒத்திருக்குமோ? (ஆகாது என்பதாம்); கதிர்மதி ஆம்
எனின் கலைகள் தேயும் -
ஒளியுடைய சந்திரன் என உவமை கூறுவோம்
என்றால் அந்தச் சந்திரனின் கலைகள் நாள்தோறும் தேய்ந்து விடும்;
அம்மதி எனின் மதிக்கும் ஓர்மறு உண்டு என்னும் - அவ்வாறே அந்தச்
சந்திரனை உவமை கூறினாலும் அந்தச் சந்திரனுக்கும் கறை எனும் ஒரு
குற்றம் எப்போதும் உள்ளது என்று சொல்லுவாள்; ஆல் - ஈற்றசை.

     பொதி - மொட்டு, அரும்பு 'பொதியினை நகுவன புணர்முலை' (75)
எனப் பால காண்டத்தில் நாட்டுப்படல வரி இதனை வலியுறுத்தும்.
அடிக்கடி கூம்பி மலரும் தாமரைப் பூவும், நிலை மாறிய நிலையையும்
எப்போதும் கறையையும் கொண்ட சந்திரனும் இராமனின் முகத்திற்கு
ஒப்பாகா எனக் காரணத்தோடு இராமனின் முக அழகின் சிறப்பைச்
சூர்ப்பணகை நினைப்பாள்.

     ஒப்பதோ - ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

     என்றும் மலர்ந்து வாடாது விளங்குவது இராமனின் முகம், வளர்ந்து
தேயும் மதி இதற்கு ஈடாகாது கலைகள் தேய மறு மட்டும் நிலைத்திருக்கும்
என உவமேயத்தால் உவமைக்குள்ள வேற்றுமையை விளக்குவதால் இது
வேற்றுமை அணி.                                             17