2749. | 'எவன் செய, இனிய இவ் அழகை எய்தினோன்? அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்; நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான் தவம் செய, தவம் செய்த தவம் என்?' என்கின்றாள். |
இனிய இவ் அழகை எய்தினோன் - இன்பம் அளிக்கும் இப்படிப் பட்ட அழகை அடைந்த இவன்; எவன் செய - எதைப் பெறுவதற்காக; அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான் - வீண் ஆக்கிக் கொள்ளத் தன் அழகிய திருமேனி வருந்தத்தவம் செய்கிறான்?; நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான் - மேலும் புதுமையை உண்டாக்கத்தக்க இந்தத் தாமரை மலர் போன்ற கண்களை உடைய இவன்; தவம் செய - தவம் செய்யும்படி; தவம் செய்த தவம் என்' என்கின்றாள் - அத்தவம் தான் முன்னர்ச் செய்த தவம் எதுவோ' என்று வியந்து சொல்கின்றாள். எவன் - யாது. செயல் - தேடிப் பெறுதல். 'செயத்திரு' எனச் சேர்ந்து வெற்றித் திருமகள் எனப் பொருள் கொண்டு அவள் வாழும் திரு மேனி என்பாரும் உளர். நவம் - புதுமை, இதற்கு நட்பு எனப் பொருள் கொண்டு நட்புக் கொளத்தக்க எனவும் பொருள் கொள்வர். நளினம் - தாமரை; அது கண்டோர்க்கு ஒரு விருப்பத்தைத் தோற்றுவித்தலால் 'தவம் செய்த தவம்’ என்ற தொடரினைப் பின்னர்ச் சுந்தர காண்டத்திலும் ’தவம் செய்த தவமாம் தையல்' (6037) எனச் சீதையைக் குறிப்பதுடன் ஒப்பிடலாம். தவம் செய்வது அரக்கிக்கு வெறுப்பூட்டுவது எனினும் இராமனின் தவக்கோலம் அவள் மனத்திலும் தவம் பற்றி உயர்வாக எண்ணச் செய்தது. அழகிய மேனி தவம் செய்வதால் வருத்தத்திற்குட்படுகிறதே என இராமன் அழகு வாடுவதற்கு வருந்துகின்றாள். எவன் - குறிப்பு வினை முற்றாலணையும் பெயர். 18 |