2750. உடுத்த நீர் ஆடையள்,
     உருவச் செவ்வியள்
பிடித் தரு நடையினள்
     பெண்மை நன்று; இவன்
அடித்தலம் தீண்டலின்
     அவனிக்கு அம்மயிர்
பொடித்தன போலும், இப்புல்
     என்று உன்னுவாள்

     உடுத்த நீர் ஆடையள் - கடலாகிய நீரைத் தன் ஆடையாக
உடுத்தவளும்; உருவச் செவ்வியள் - வடிவத்தின் அழகை உடையவளும்;
பிடித்தரு நடையினள் அவனிக்கு - பெண் யானையின் நடையைப்
போன்ற நடை உடையவளும் ஆன நிலமகளின்; பெண்மை நன்று -
பெண் தன்மை நன்றாய் உள்ளது (ஏன் எனில்); இப்புல் இவன் அடித்தலம்
தீண்டலின் -
இந்நிலத்தில் முளைத்த இப்புல் இராமனாம் இவனுடைய
திருவடிகள் பட்டமையால்; அம்மயிர் பொடித்தன போலும் -
(அந்நிலமகளின்) உடலிலுள்ள அந்த அழகிய மயிர்கள் சிலிர்த்தன போலும்;
என்று உன்னுவாள் - என நினைப்பாள்.

     உடுத்த நீர் ஆடையள் என்பதற்குக் கடலை உடுத்துக் கொண்ட
ஆடையாக உடையவள் எனவும் கொள்வர். மகளிர் நடைக்குப் பெண்
யானை நடையை உவமை கூறுவது மரபு. ஆடவன் உடல் தன் மேற்
படவும் இன்ப உணர்வு மீதூரப் பெண்ணின் உடலில் மயிர் பொடித்து
நிற்பது போல நிலத்தின் மேல் புற்கள் நின்றநிலை சூர்ப்பணகை
கண்களுக்குத் தென்பட்டது. இவ்வுணர்வு அவள் அடிமனத்தில் இராமன்
மேல் கொண்ட காம உணர்வால் அவன் அடித்தலம் தன் மேல் படாதா
என ஏங்கிய ஏக்கத்தின் வெளிப்பாடு எனலாம். பூமகளின் மயிர்களாகப்
புற்கள் உருவகம் செய்யப்பட்டுள்ளன. இக் கருத்தே கிட்கிந்தா காண்டக்
கார் காலப் படலத்தில் 'நெடு நில மடந்தை, புறமயிர்த்தலம் பொடித்தன
போன்றன - பசும் புல்' என உருவகமாகப் புலப்படும் (4190).

     பிடித்தரு நடை - ஒற்று மிகுந்தது எதுகை நோக்கி. தரு - உவமைச்
சொல்.

     இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துளது.             19