2751.வாள் நிலா முறுவலன்
     வயங்கு சோதியைக்
காணலனே கொலாம்,
     கதிரின் நாயகன்?
சேண் எலாம் புல் ஒளி
     செலுத்தி, சிந்தையில்
நாணலன், மீமிசை
     நடக்கின்றான்' என்றாள்

    வாள் நிலா முறுவலன் - ஒளிமிக்க நிலவு போலப் பற்களை உடைய
இவனது; வயங்கு சோதியைக் காணலனே கொலாம் கதிரின் நாயகன் -
திருமேனியில் விளங்கும் ஒளியை பார்த்திலனே போலும் ஒளியின்
தலைவனாம் சூரியன் (ஏன் எனில்); சேண் எலாம் புல் ஒளி செலுத்தி -
நெடுந்தூரத்தில் அவன்தன் அற்ப ஒளியைச் செல்லவிட்டு; சிந்தையில்
நாணலன் -
உள்ளத்தில் வெட்கம் இல்லாதவனாய்; மீமிசை நடக்கின்றான்
என்றாள் -
மிகவும் மேலேயுள்ள வானத்தில் செல்கின்றான் என இழித்துக்
கூறினாள்.

     இராமனின் திருமேனி ஒளியைச் சூரியன் கண்டிருந்தால் இவன்
ஒளியுடன் தன்னொளி ஒவ்வாது என வெட்கி ஒளிந்திருப்பான். ஆதலால்
'காண்கிலன்' எனக் கதிரவனைச் சூர்ப்பணகை பழிப்பாள். மற்றைய
கதிர்களை நோக்கச் சூரியன் ஒளிமிக்கவன் எனவே கதிரின் நாயகன்'
எனப்பட்டான். இவ்வாறு இராமனின் ஒளிச் சிறப்பைப் போற்றும் வகையில்.
அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் சீதை இலக்குவனுடன்
இராமன் வழிநடந்த போது 'வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி
சோதியின் மறைய' (1926) என அழியா அழகுடையவனாகப் பாராட்டப்
பெறுவான்.

     சூர்ப்பணகை இராமனின் திருமேனி அழகில் ஈடுபட்டு அறிவழிந்து
உணர்வு பொங்கக் கதிரவனைப் பழிக்கின்றாள்.                      20