2752. | குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர் இப்பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் ஒப்பு என, உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ? துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன்? |
குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர் இப்பெருந் தோளவன் இதழுக்கு - கடத்தற்கு அருமையான பெரிய மலைகளை வென்று உயர்ந்த இந்தப் பெரிய தோள்களை உடைய இவனுடைய உதடுகளுக்கு; ஏற்பது ஓர் ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ - தகுதியானதோர் உவமை என்று உலகத்தில் சொல்வதற்குப் பொருந்துமோ (பொருந்தாது); (ஆனால்) துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன் - பவளத்தினைவிட மேம்பட்ட எதைச் சொல்லுவேன் (என்றாள் சூர்ப்பணகை) குப்புறல் - கடத்தல், தாண்டிச் செல்லல்; 'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல் வெறுவிது' எனக் கடல்தாவு படலத்தில் (4754) இப்பொருளில் இச்சொல் வரும். மாக்குன்று பெரிய மேருமலையுமாம். துப்பு என்ற சொல் பவளம், வலிமை அழகு, சிறப்பு போன்ற பொருளில் வரும் இதழுக்குப் பவளம் உவமையாகப் பயன்படும். ஆனால் இராமன் இதழுக்கு இது ஒப்பாகாது என மறுப்பாள். 'உரைக்கின் உள்ளமே துப்பெனில்' எனப் பாடம் கொண்டு, (பவளத்தை உவமையாகக்) கூறினால் உள்ளமே காறி உமிழ்வாய் எனப் பொருள் கொள்வர். இனி, இப்பாடத்திற்கே, இதழுக்கு ஒப்பாக உலகில் வேறோர் பொருளை உவமை கூறினால் அவ்வாறு கூறிய மனமே கடுமையானது என்பர். இராமன் இதழுக்குப் பவளம் ஒப்பாகாது என்று அனுமன் சீதையிடம் இராமன் மேனி பற்றிக் கூறும் போது 'பூவாப் பவளமோ மொழியற் பாற்றே?' (5279) என்பது இத்துடன் ஒப்பிடற்குரியது. உலகம் - இடவாகுபெயர். இப்பாடலில் எதிர்நிலை அணி உளது. 21 |